
விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ லட்சுமணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டவம் ஆடி சொல்ல முடியா துயரத்தை ஏற்படுத்தியது. இதில், முக்கிய அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் உயிரிழந்தனர். இதனையடுத்து, தடுப்பூசி முகாம் மற்றும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அரசு எடுத்ததையடுத்து பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டது. ஆனால், எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து கொண்டு செல்லுமாறு பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ. இருப்பவர் டாக்டர் ஆர். லட்சுமணன். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் உடம்பு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதன் பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து லட்சுமணன் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு உரிய சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது குடும்பத்தினரையும் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.