கழிவுநீரை வடிகட்டி குடிநீராக பயன்படுத்தும் அவலம் !! மதுரை அருகே தண்ணீர் பஞ்சத்தால் நேர்ந்த கொடுமை !!

By Selvanayagam PFirst Published Jun 20, 2019, 11:51 PM IST
Highlights

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கழிவுநீரை வடிகட்டி குடிக்கும் கிராம மக்களின் அவல நிலையை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வலையங்குளம் கிராமம் உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இந்த கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆழ்துளை போர்வெல் போட்டும் அன்றாடம் உபயோகிக்கும் உப்புத் தண்ணீருக்கு கூட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கிராம மக்கள் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. கிராம மக்கள் சாலையோரங்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரை வடிகட்டி குடிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நீரை எடுப்பதற்குகூட அரை கிலோ மீட்டர் தூரம் ஊரில் இருந்து நடந்து வர வேண்டும்.

மேலும் குடிநீருக்காக தண்ணீர் எடுக்க வேண்டும் என்றால் 4 வழிச்சாலை அருகே உள்ள ராயபாளையம் கிராமத்திற்கு தான் செல்ல வேண்டும்.

இங்கு செல்ல 5 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. எனவே ஆண்கள் தினந்தோறும் இருசக்கர வாகனங்களில் குடங்களை தூக்கிக் கொண்டு தண்ணீர் எடுத்து வருவதையே முழுநேர வேலையாக பார்த்து வருகின்றனர்.

கிராமத்தில் ஆடு, மாடுகள் அதிக அளவில் வளர்ப்பதால் தண்ணீருக்கு பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

click me!