விஜயகாந்த் ஸ்டைல்..! நடிகர் விஜயின் மாஸ்டர் ஸ்கெட்ச்..! ஊரக உள்ளாட்சித் தேர்தல் போட்டியின் பின்னணி என்ன?

By Selva KathirFirst Published Sep 20, 2021, 11:05 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தலில் ஆழம் பார்த்துவிட்டு விஜயகாந்த் அரசியல் களம் புகுந்தார். அதே பாணியில் நடிகர் விஜயும் தற்போது உள்ளாட்சித் தேர்தல் மூலமாக ஆழம் பார்க்க ஆரம்பித்துள்ளார்.

ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விஜயின் மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நேரடியாக அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியல் கட்சி துவங்கினார். ஆனால் அதற்கு பல வருடங்களுக்கு முன்பிருந்தே விஜயகாந்த் ரசிகர் மன்றம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வந்தது. குறிப்பாக 2001ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின் சார்பில் போட்டியிட்ட பலர் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றனர். வாக்கு சதவீதமும் அப்போதைய திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு நிகராக இருந்தது. இந்த தேர்தல் தான் விஜயகாந்தின் அரசியல் வருகையை உறுதி செய்தது.

அதாவது சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தலில் ஆழம் பார்த்துவிட்டு விஜயகாந்த் அரசியல் களம் புகுந்தார். அதே பாணியில் நடிகர் விஜயும் தற்போது உள்ளாட்சித் தேர்தல் மூலமாக ஆழம் பார்க்க ஆரம்பித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலேயே விஜயின் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட்டனர். ஆனால் அப்போது விஜயின் புகைப்படம் மற்றும் மன்ற கொடி பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது அதற்கு அனுமதி கிடைத்திருப்பது தான் விஜய் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

கடந்த வாரம் சென்னை அருகே பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் என யார் வேண்டுமானாலும் போட்டியிட்டுக் கொள்ளலாம். ஆனால் யார் யார் போட்டி, எந்த பதவிக்கு போட்டி, எதிர்த்து களத்தில் இருப்பவர்கள் யார் யார், போட்டியிடும் இடத்தில் நமது ரசிகர் மன்ற பலம் என்ன என்கிற விஷயத்தை முதலிலேயே தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து இடங்களிலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை போட்டியிட மேலிடம் அனுமதிக்கவில்லை என்கிறார்கள். மேலும் பொத்தாம் பொதுவாக விஜய் புகைப்படம் மற்றும் மன்ற கொடியை அனைவரும் பயன்படுத்தவும் அனுமதி இல்லை என்கிறார்கள். வெற்றி வாய்ப்புள்ள நபர்கள், சிக்கல் இல்லாத எதிர் வேட்பாளர்கள், சர்ச்சை இல்லாத இடங்களில் மட்டுமே ஆழம் பார்க்க விஜய் ரசிகர் மன்றம் முடிவெடுத்துள்ளதாம். இதனிடையே நடிகர் விஜய்க்கு எப்போதுமே அரசியல் ஆசை உண்டு. அதனால் தான் அவரது சமீப கால திரைப்படங்களில் அரசியல் வசனம் தெறிக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க வரும்போது கூட பெட்ரோல் விலை உயர்வை சுட்டிக்காட்டும் வகையில் சைக்கிளில் வந்து பரபரப்பை பற்ற வைத்தார் விஜய்.

இந்த நிலையில் அரசியல் களத்தில் இருந்து ரஜினி ஒதுங்கியுள்ள நிலையில், தற்போது வழக்கம் போல் திமுக, அதிமுகவிற்கு மாற்று யார் என்கிற கேள்வி எழும் நிலையில், அதனை பயன்படுத்திக் கொள்ள விஜய் காய் நகர்த்தக்கூடும் என்கிறார்கள். ஆனால் இது உண்மையிலேயே அரசியல் களத்தில் போட்டியிடவா? அல்லது ரஜினி பாணியில் தன் பெயரை அரசியல் களத்தில் பரபரப்பாக வைத்துக் கொள்ளவா என்பதுபோகப் போகத்தான் தெரியும்.

click me!