நான் அறிவாலய ஓட்டுதிண்ணைதான்.. காஞ்சிமட வாசலில் யாசகம் கேட்டவில்லையே.. மணியரசனை எகிறி அடித்த சுப.வீ..

By Ezhilarasan BabuFirst Published Sep 20, 2021, 9:50 AM IST
Highlights

இவ்வாண்டும் தம் பெயர்களைப்  பதிவு செய்துள்ளவர்களில் மிகப் பெரும்பான்மையினர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விழா முடிந்துஅமைச்சர் விடைபெற்றுச் சென்றபிறகும், ஏறத்தாழ ஒரு மணி நேரம், திராவிடப் பள்ளி  மாணவர்கள் அரங்கை விட்டு வெளியேறவில்லை.

சென்ற ஆண்டு தந்தை பெரியார் பிறந்த நாளில், "திராவிடப் பள்ளி"யைத் தொடங்கினோம். ஓராண்டு நிறைவுபெற்றுள்ளது. இரண்டாமாண்டு தொடக்க விழாவும், முதலாண்டில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் விழாவும், நேற்று (18.09.21} மாலை. சென்னையில் நடைபெற்றது. 

ஒரு பள்ளியின் ஆண்டுவிழாதானே என்று கருதாமல், தமிழ்நாடு, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள்  கலந்து கொண்டு, சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரை ஆற்றி, விழாவுக்குப் பெருமை சேர்த்தார். அந்த விழா எதிர்க்கருத்து உடையவர்கள் சிலரை எரிச்சல் படுத்தியுள்ளது என்பதை நேற்று இரவே நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் மெய்ப்பித்துள்ளது. அந்த உரையாடலுக்கு, "திராவிடப் பிணம்: உயிர்ப்பிக்குமா திராவிடப்பள்ளி?" என்று பெயர் சூட்டியுள்ளனர். எவ்வளவு வெறுப்பு, எவ்வளவு வன்மம்! மருத்துவர் சுமந்த்  ராமனும் கொஞ்சம் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளார். தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "எல்லா  இடங்களிலும் திராவிடப்பள்ளிகள் வர வேண்டும் என்று அமைச்சர் பேசியதைச் சுட்டிக்காட்டி, "What exactly is a திராவிடப் பள்ளி?" என்று கேட்டிருக்கிறார். சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள, அவரும் கூடப் பள்ளியில் சேர்ந்து படிக்கலாம். 

சில நாள்களுக்கு முன் சென்னையில்  நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய "பேராசான்" ஒருவர் எனக்கு விடை சொல்லியிருக்கிறார். "சங்க இலக்கியத்தில் எங்காவது திராவிடம் என்ற சொல் இருக்கிறதா?' என்று அவர் கேட்டுக்கொண்டே இருந்தார். "சங்க இலக்கியத்தில் அம்மா, அப்பா என்ற சொற்கள் கூடத்தான் இல்லை. அதற்காக அவற்றைத் தமிழ் இல்லை என்று விலக்கிவிட முடியுமா?"  என்று கேட்டிருந்தேன். அதற்குத்தான் அவர் விடை சொல்லியிருக்கிறார். அவர் எனக்கு 'ஒட்டுத்திண்ணை' என்று ஒரு பெயர் சூட்டியுள்ளார். அறிவாலயத்தின்  ஒட்டுத்திண்ணையில் நான்  ஒண்டி இருக்கிறேனாம். அது ஒன்றும் இழிவில்லை. அறிவாலயம் எங்கள் அன்னை இல்லம். எங்களை அரவணைக்கும் அன்பு இல்லம். சமூக நீதியை முன்மொழியும் சமதர்ம இல்லம். அதன் ஒட்டுத்திண்ணையில் அமர்ந்திருப்பது பெருமைதானே தவிர இழிவில்லை. காஞ்சி மடத்தின் வாசலில் கைநீட்டி நின்று யாசகம் கேட்பதுதான்  அவமானம்! போகட்டும், அவர் என்னை ஒட்டுத்திண்ணை என்றே அழைக்கட்டும். 

நாம் அவரைப் பேராசான் என்றே விளித்திடுவோம்!  அவர் சங்க இலக்கியத்தில் அம்மா என்ற சொல் எங்கே இருக்கிறது என்று எடுத்துக் காட்டியுள்ளார். "உண்டாலம்ம இவ்வுலகம்" என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடல்தான் அவர் சுட்டியுள்ள சங்க இலக்கியம்!  இதில் அம்மா என்ற சொல் வந்திருக்கிறதா இல்லையா என்று கேட்கிறார். தமிழ் தெரிந்தவர்களால் சிரிப்பை அடக்க முடியாது. அந்த அம்ம என்னும் சொல், பொருளற்ற அசைச்சொல் என்பது அனைவருக்கும் தெரியும். நம் பேராசான்களுக்கு மட்டும் தெரியவில்லை. நம் விழாவில் பேசிய முன்னாள் துணைவேந்தர் ம. ராசேந்திரன் சரியாகச் சொன்னார், பள்ளி என்றால் ஓர் இடம் என்று கருத்திக்கொள்ள வேண்டியதில்லை, அது ஒரு சிந்தனைப் போக்கு {school of thought} என எடுத்துச் சொன்னார். ஆம், திராவிடம் என்பது ஒரு கருத்தியல் என்றுதான் நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டுள்ளோம். அதனைத்தான் திராவிடப்பள்ளியில் பயிற்றுவிக்கிறோம்! 

நாம் திராவிடரா, தமிழரா என்று சந்தேகம் வந்து, தெருத் தெருவாக,  வருகிறவர், போகிறவர் எல்லோரிடமும் அந்தச் சந்தேகத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிற பேராசான்களுக்கும், சில கோமான்களுக்கும், வழக்கறிஞர் அருள்மொழி, திராவிடப் பள்ளி  விழாவில், தனக்கேயுரிய வகையில் எளிமையாகவும், தெளிவாகவும் விடை சொன்னார். திராவிட இயக்கத்தின் வரலாறு, திராவிட இயக்கக்  கோட்பாடுகள், திராவிட இயக்கம் இம்மண்ணில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் ஆகியனவற்றை நாம் நூல்கள் வழியிலும், இணைய வழியிலும் திராவிடப் பள்ளி மூலம் எடுத்துச் சொல்கின்றோம். தாங்க முடியாதவர்கள் தணலில் கிடந்து தவிக்கின்றனர். 

நேற்றைய விழாவில் எங்கெங்கிருந்தோ மாணவர்கள் நேரில் வந்து சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். ஒருவர் தூத்துக்குடியிலிருந்து வருகிறேன்  என்றார்.  இதற்காகவே வந்தேன். இன்று இரவு ஊருக்குத் திரும்புகிறேன் என்று கூறினார். அமெரிக்காவிலிருந்து தேர்வு எழுதிக் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவி  கனிமொழி, தான் வரமுடியவில்லை என்பதால், தன் அம்மாவை அனுப்பிச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளியான  உதய மருது மேடைக்கு வந்து, அமைச்சரிடம் சான்றிதழைப் பெற்றுக்கொண்ட போது, இம்மண்ணில் என்றென்றும் திராவிடம் வெல்லும் என்று தோன்றியது. அடடா, இளைஞர்கள் திராவிடத்தை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் வருகின்றனர் என்பதே மகிழ்வைத் தருகிறது. இவ்வாண்டும் தம் பெயர்களைப்  பதிவு செய்துள்ளவர்களில் மிகப் பெரும்பான்மையினர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

விழா முடிந்துஅமைச்சர் விடைபெற்றுச் சென்றபிறகும், ஏறத்தாழ ஒரு மணி நேரம், திராவிடப் பள்ளி  மாணவர்கள் அரங்கை விட்டு வெளியேறவில்லை. என்னுடனும், பள்ளியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் உமாபதியுடனும் ஒவ்வொருவராகப் படம் எடுத்துக் கொண்டனர். தங்களுக்குள் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டு உரையாடினர். ஒரு  பள்ளி விழாவாகத் தொடங்கி, ஒரு குடும்ப விழாவாக அது நிறைவடைந்தது. பள்ளியில் பயில வந்த மாணவர்களில் சிலர், பேரவை உறுப்பினர்களாகத் தங்களைப்  பதிவு செய்து கொண்டனர். பள்ளிக்கும், இந்த விழாவிற்கும் உழைத்த பேரவைத் தோழர்கள் மேடையில் சிறப்பிக்கப்பட்டனர். இவ்வளவு சிறப்பாக நடைபெற்ற விழாவில் ஒரு குறையும் இருந்தது. அது என்னுடைய பிழையால் நேர்ந்த குறை. இயக்கத்தின் நிதி நிலையைத் தாங்கிப் பிடிக்கும், நிதிக்குழுத் தலைவர் தோழர் செல்வின். கடும் உழைப்பாளியான  தோழர் இக்லாஸ் உசேன் இருவரையும் மேடைக்கு அழைத்து, அமைச்சர் முன்னிலையில் சிறப்பிக்கத் தவறிவிட்ட்டோம் என்னும் குறை மட்டும் என்னை இப்போதும்  அரித்துக் கொண்டே இருக்கிறது. 

திராவிடப் பள்ளி விழா, ஒட்டுத்திண்ணை மாதிரி இன்னும் சில பட்டங்களை நமக்குப் பெற்றுத் தரக்கூடும். சில வசைமொழிகளை வாங்கி வரவும் கூடும். எது வந்தாலும், இன்னும் எத்தனை பேர் வயிற்றெரிச்சல் பட்டாலும், இம்மண்ணில் திராவிடக் கருத்தியல் வெற்றி கொள்ளும். நம் தலைவர் தளபதியின் ஆட்சியே இனித் தொடரும்! திராவிடப் பள்ளிகள் ஒன்று பலவாய்ப் பெருகும். திராவிடப் போர்வீரர்கள், ஆயிரம், லட்சமாய் அணிவகுப்பர். பள்ளிக்கூட மாணவர்களை நோக்கியும் விரைவில் திராவிடக் கருத்தியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டம் உள்ளது.
 

click me!