
ரமணா! எனும் மைல் ஸ்டோன் சினிமாவில் நடித்ததன் மூலம் கேப்டன் பாராட்டு வாங்கியதை விட அந்த படத்தில் வரும் புள்ளி விபர டயலாக்கை வைத்து அவரை ‘வெச்சு செஞ்ச’ சம்பவங்கள்தான் அதிகம்.
ஆன்னா...ஊன்னா...
‘தமிழ்நாட்டுல மொத்தம் முப்பது படம் ஓடுது. அதுல பலான படம் ஆறு! பிளாப்பு படம் பனிரெண்டு...’ என்று ஆரம்பித்து பல விஷயங்களுக்கு இந்த புள்ளி விபர ஸ்டைலை வைத்து ஓட்டு ஓட்டென ஓட்டி தள்ளுவார்கள்.
கடந்த சில வருடங்களாக இந்த புள்ளி விபர ஸ்டைலை எல்லோரும் மறந்திருந்த நிலையில் இப்போது விஜயகாந்தே இதை மறுபடியும் துவக்கியிருக்கிறார். அதுவும் நடிகனாக அல்ல (ஏண்டா, அந்தாளு மறுபடியும் நடிக்கணும் அப்படின்னு வேற உங்களுக்கு ஆசையிருக்குதா!) அரசியல்வாதியாக.
அவர் தட்டியிருக்கும் புள்ளிவிபர அறிக்கையை வாசித்தால் ஃபுல்லாக புல்லரிக்குது மாமே!...
* தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை பதிவு செஞ்சு காத்திருக்கிறவங்களோட மொத்த எண்ணிக்கை எண்பத்து ஓரு லட்சம்.
* இதுல 57 வயசுல காத்திருக்கிறவங்க 5,709 பேர்.
* முதுநிலை அறிவியல் பட்டதாரிகள் 1 லட்சத்து 33 ஆயிரம் பேர்.
* முதுநிலை பட்டதாரிகள் 2,38,000 பேர்.
* பொறியாளர் இளநிலை பட்டதாரிகள் 2, 46,000 பேர்.
* இடைநிலை ஆசிரியர்கள் 2,17,000 பேர்.
* பட்டதாரி ஆசிரியர்கள் 3, 09,000 பேர்.
* சட்டம் படித்தவர்கள் 2,536 பேர்.
* பொறியியல் பட்டதாரிகள் 383 பேர்.
* பத்தாம் வகுப்புக்கு கீழ் படித்தவர்கள் 4,20,000 பேர்.
இது போக இன்னும் பல பேர் பதிவே செய்யாமல் வேலை தேடி விரக்தியில் அலையுறாங்க.
படித்த இளைஞர்கள் வேலைக்காக காத்திருந்து, காத்திருந்து இறுதியில் தன் எதிர்கால கனவுகளை தகர்த்து, தன் குடும்பத்தையும் காப்பாற்ற முடியாமல், சமூக விரோதிகளாக மாறுவதன் விளைவுதான் இன்று நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தற்கொலைகள் ஆகியன.” என்று பட்டியலிட்டு பகீர் கிளப்பியிருப்பவர்,
அறிக்கையின் இறுதியில்
“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க என்ன செயல் திட்டம் வைத்திருக்கிறார் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.” என்று கேட்டாரே ஒரு கேள்வி.
புள்ளி விபரம் பேசி புரட்டிப்போடும் ஸ்டைலை அவனவன் மறந்து கிடந்த நிலையில் விஜயகாந்த் இப்படி தானே வாயை கொடுத்து மாட்டிக் கொண்டிருக்கிறார். அதிலும் ஆட்சியை காப்பாற்றவே என்ன திட்டம் வைத்திருக்கிறோம் என்று தெரியாமலிருக்கும் எடப்பாடியிடம் வேலைவாய்ப்புக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? என விஜயகாந்த் கேட்டிருப்பது செம்ம சிரிப்பு பாஸ் என்று குலுங்குகிறாரக்ள் அரசியல் குறும்பர்கள்.
ஏன் கேப்டன் இந்த வேண்டாத வேல?