
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆராய்ச்சியை தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் நேரில் ஆய்வு செய்தார்.
அரசியல் என்னும் பரமபதத்தில் ஒரே மூச்சில் உச்சாணிக்குச் சென்றவர் விஜயகாந்த். எந்த ஏணி அவரை உயரத்திற்கு கைப்பிடித்து அழைத்துச் சென்றதோ அதே ஏணி அவரை கீழே தள்ளியுள்ளது. காலத்திற்கு ஏற்ப செயல்படத் தெரியாததும், காய்நகர்த்தத் தவறியதுமே இந்தச் சறுக்கலுக்கு காரணம்.
கொந்தளிக்கும் அரசியல் கடலில் அனைத்து கட்சிகளும் புல் திரட்டில் ஆர்ப்பரிக்கும் பேரலைகளைத் தாண்டி தப்பித்துக் கொண்டிருக்கும் நிலையில், நங்கூரத்தை இறக்குங்கள், கப்பலை நிறுத்தலாம் என்று கூறி அவரை மட்டும் அல்ல தே.மு.தி.க. என்ற கட்சியையும் ஆபத்தில் சிக்க வைத்துவிட்டார் விஜயகாந்த்.
கப்பலை காப்பாற்ற வேண்டும் நங்கூரத்தை தூக்குங்கள் என்று விஜயகாந்தின் கைகளைப் பிடித்து அவ்வப்போது பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார் அவரது மனைவி பிரேமலதா .அப்படி இருந்தும் விஜயகாந்தால் சரிவர ஜொலிக்க முடியவில்லையே....
தே.மு.தி.க. சார்பில் திருப்பூரில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டமே இதற்குச் சான்று. கேப்டன் வருவார், எதிர்க்கட்சிகளை கேப்பில்லாமல் அடித்து நொறுக்குவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த தொண்டர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிச்சம்.
கேப்டன் வருவார் காத்திருங்கள்.... காத்திருங்கள்.... என்று கூறி கலைந்து செல்லவிருந்த தொண்டர்களை சமதானப் படுத்த நிர்வாகிகள் பட்டபாடு கண்கூடாகத் தெரிந்தது. இறுதியாக வந்த விஜயகாந்த் மைக்கைப் பிடித்து ஏதோ பேச முற்படுகையில் கண்களில் கண்ணீர் தாரையாக் கொட்டத் தொடங்கியது....
கேப்டன் அழுவதாக நினைத்த தொண்டர் ஒருவர் கத்த, கடுப்பாகிப் போன விஜயகாந்த் வழக்கமான பாணியிலேயே அதற்கு பதிலளித்தார். எதாவது அரசியல் பேசுவார் என்று எதிர்பார்த்தால், என்ன பேசறதுனு தெரியல விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் என்று மட்டும் கூறி விட்டு சென்றுவிட்டார்.
இப்படி ஒரு கட்சித் தலைவர் பதவிக்கான இலக்கணக்கத்தை இழந்துவிட்ட விஜயகாந்தின் செயல்பாடுகளுக்கு அவரது உடல்நிலையும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.
செயல்படவே முடியாத நிலைக்கு விஜயகாந்த் தள்ளப்பட்டிருந்தாலும், அவரை தொடர்ந்து இயக்கி வருபவர் மனைவி பிரேமலதா. திருப்பூர் பொதுக்கூட்டத்திற்குப் பிறகு மனைவி சகிதமாக சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆராய்ச்சிகளை விஜயகாந்த் இன்று நேரில் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விஜயகாந்த் பேசியதில் தெளிவு இருந்ததைக் காண முடிந்தது.ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடங்கி , விவசாயிகள் பிரச்சனை வரை அவரது பேச்சில்அத்தனை கடுகடுப்பு...
"இது ஜனநாயக நாடு. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போச்சு. குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. விவசாயிகள் மற்றும் மக்களைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை. 4 ஆண்டுகால ஆட்சியை நகர்த்தியாக வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். ஒரு முறை போட்டா, 3 முதல் அமைச்சர்களா?
வெல்கம்பேக் கேப்டன் விஜயகாந்த்......!