பிரசாரத்துக்கு வருவாரா மாட்டாரா விஜயகாந்த்..? பிரேமலதாவுக்கு பெரும் நெருக்கடி கொடுக்கும் அ.தி.மு.க.! தடுமாறும் தே.மு.தி.க.

By Vishnu PriyaFirst Published Feb 18, 2019, 11:47 AM IST
Highlights

முதல் கண்டிஷனான விஜயகாந்த் நாடு திரும்ப வேண்டும்...என்பதை நிறைவேற்றிவிட்டார்கள். ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் உட்காரும் நிலையில் கேப்டன் இல்லை, இல்லவேயில்லை என்பது கடந்த சனிக்கிழமையன்று அவர் ஏர்போர்ட் வாசலில் இருந்த நிலையிலிருந்தே கட்சியினருக்கு புரிந்துவிட்டது.

அ.தி.மு.க. வின் கூட்டணியில் இடம் பெற வேண்டும், ஓரளவு மரியாதையான எண்ணிக்கையில் சீட் வேண்டும், ஓரளவுக்காவது தங்களுக்கு விருப்பமான தொகுதிகளும் வேண்டும்!...என்றால் விஜயகாந்த் சென்னை திரும்ப வேண்டும், கூட்டணி பேச்சுவார்த்தையில் இடம் பெற வேண்டும், அவருடைய முகத்துக்காக மட்டுமே தே.மு.தி.க.வுக்கு ஓட்டுக்கள் விழும் எனவே அவர் பிரசாரத்திலும் வந்தமர வேண்டும்!...இவைதான் பிரேமலதாவுக்கு அ.தி.மு.க. போட்ட கண்டிஷன்களாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

இவற்றில் முதல் கண்டிஷனான விஜயகாந்த் நாடு திரும்ப வேண்டும்...என்பதை நிறைவேற்றிவிட்டார்கள். ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் உட்காரும் நிலையில் கேப்டன் இல்லை, இல்லவேயில்லை என்பது கடந்த சனிக்கிழமையன்று அவர் ஏர்போர்ட் வாசலில் இருந்த நிலையிலிருந்தே கட்சியினருக்கு புரிந்துவிட்டது. 

தலைமை கூறியிருந்தது போல் கேப்டன் முழுவதுமாக குணமடையவில்லை! என்று  அவரது கட்சியினர் தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர். அதனால்தான் அவரால் பேச முடியவில்லை என்பதையும் உணர்ந்துவிட்டனர். பழைய விஜயகாந்தை நம்பி வந்த அவர்களுக்கு, கேப்டனின் இந்த நிலை மிகப்பெரிய மன வருத்தத்தை தந்துள்ளது. 

இந்த சூழலில் கேப்டனை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும், அது இயலாவிட்டாலும் கூட பிரசார மேடைகளுக்கு வந்தமர வேண்டும் என்று கூட்டணியின் தலைமை கட்சியான அ.தி.மு.க. நெருக்கடி கொடுப்பது பிரேமலதாவை வெகுவாக பாதித்திருக்கிறதாம். தூசி, புழுதி நிறைந்த பொதுக்கூட்ட இடங்களுக்கு வந்து அமரும் வகையில் கேப்டனின் உடல் நலன் இல்லை என்பது அதிகார மையங்களின் தலைமை அளவில் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

  

ஆனாலும் அ.தி.மு.க. இப்படி நெருக்கடி கொடுப்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் அ.தி.மு.க.வோ தொடர்ந்து, ‘பிரசாரத்துக்கு வருவாரா மாட்டாரா விஜயகாந்த்?’ எனும் கேள்வியை கேட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த நெருக்கடி விவகாரம் தே.மு.தி.க.வின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் லெவலில் தெரிந்துவிட்ட காரணத்தால் பெரும் அப்செட்டில் இருப்பவர்கள், அடுத்து என்ன செய்யப்போகிறோம்? எப்படி நிலைமையை சமாளிக்கப் போகிறோம்! என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்களாம். ஹும், எப்படி வாழ்ந்த கேப்டன்யா!

click me!