
தேர்தல்- உட்கட்சி மோதல்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சியில் பல்வேறு உட்கட்சி மோதல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை, முக்கியத்துவம் தரவில்லையென தெரிவித்து கட்சியில் வெளியேறி எதிர்கட்சியில் சேரும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் தமிழக காங்கிரஸ் கட்சியில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இருந்து 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதாரணி கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்தார். குறிப்பாக கன்னியாகுமரி தொகுதியில் எம்பியாக இருந்த வசந்தகுமார் இறந்த நிலையில் அந்த தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதிருப்தியில் விஜயதாரணி
ஆனால் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்திற்கு காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பு வழங்கியது. இதனையடுத்து காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் பதவியும் விஜயதாரணிக்கு வழங்காமல் செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியில் முழுவதுமாக செயல்படாமல் ஒதுங்கி இருந்தார். இந்தநிலையில் தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கேஎஸ் அழகிரி மாற்றப்பட்டு புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். மேலும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக ராஜேஷ் நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி நேற்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா
இதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விஜயதாரணி நீக்கப்பட்ட நிலையில், கட்சி தாவல் சட்டத்தின் கீழ் எம்எல்ஏ பதவியை பறிக்கவும் சபாநாயகருக்கு கடிதம் கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் சபாநாயகர் அப்பாவுவிற்கு விஜயதாரணி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை 24ஆம் தேதி முதல் ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். இந்த உத்தரவை ஏற்று சபாநாயகர் இன்றோ அல்லது நாளையோ தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அனுப்பிவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் விஜயதாரணி கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்