கன்னியாகுமரியைக் கைப்பற்றிய காங்கிரஸ்... அப்பா பெயரைக் காப்பாற்றிய விஜய் வசந்த்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 2, 2021, 7:27 PM IST
Highlights

காலை முதலே கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை வகித்து வந்தார். 

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளோடு, கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, தேர்தலும் நடந்து முடிந்தது. 


கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அப்பாவைத் தொடர்ந்து மகன் விஜய் வசந்த் போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்தது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இத்தொகுதி வழங்கப்பட்டது. பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இருவரும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில்,  68.80 சதவீத வாக்குகள் பதிவாகின.


காலை முதலே கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை வகித்து வந்தார். தற்போது குமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனை விட ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 762 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்த் வெற்றி வாகை சூடியுள்ளார். இதையடுத்து விஜய் வசந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,  “என் மீது அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த வெற்றியை வீதிக்கு வந்து கொண்டாடாமல் வீட்டிலிருந்தே கொண்டாடும் படி கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். 
 

click me!