
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா என மொழி கடந்து அண்டை மாநிலங்களிலும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. எப்போதும் குடும்பத்தையும், பெற்றோரையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மக்கள் இயக்கத்தை மக்களுக்கு சேவை செய்யும் இயக்கமாக செயல்படுத்த வேண்டும் என்றும் தன்னுடைய ரசிகர்களிடம் கோரிக்கை வைத்து வருபவர்.
அரசியலுக்கு வர தொடர்ந்து கட்டாயப்படுத்தியதால் அப்பாவிடம் பேசுவதையே விஜய் நிறுத்திவிட்டதாக கூறியது பரபரப்பைக் கிளப்பியது. அதுமட்டுமின்றி தன்னுடைய தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்ற தேர்தல் ஆணையத்தை பதிவு செய்துள்ளார் என்ற செய்தியை டிவியில் பார்த்த மறுகணமே அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்ட விஜய், அப்பான்னு எல்லாம் பார்க்க மாட்டேன். என் இயக்க கொடி, என் பெயர் இதை எல்லாம் உரிய அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்தார்.
அதுமட்டுமின்றி ரசிகர்களின் அரசியல் ரீதியான செயல்பாடுகளையும் விஜய் பெரிதாக ஊக்குவித்தது கிடையாது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விஜய் ரசிகர்கள் நடத்திய திடீர் கூட்டம் நடத்தியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சிதம்பரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஏராளமான விஜய் ரசிகர்கள் கூடினர். இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேர்தல் பறக்கும் படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கூட்டம் நடத்த அனுமதி கோரி கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகி ஒருவர் கூறியதை அடுத்து அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். அந்த கூட்டத்தில் சிதம்பரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.பாண்டியன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றதும் தெரியவந்துள்ளது.