தமிழக பாஜகவுக்கு இப்படியொரு சோதனையா..? கட்சி மேலிடம் எடுத்த அதிரடி முடிவு..!

By Asianet TamilFirst Published Mar 19, 2021, 9:38 AM IST
Highlights

தமிழக பாஜக பிரமுகர்கள் தேர்தலில் போட்டியிடுவதால், பிரசாரத்துக்கு மற்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல், அவர்களுடைய தொகுதிக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
 

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. 20 தொகுதிகளில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற வேண்டும் என்று அக்கட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் எல்.முருகன்  தாராபுரத்திலும், மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கிலும், மூத்த தலைவர் ஹெச்.ராஜா காரைக்குடியிலும், துணைத் தலைவர் அண்ணாமலை அரவக்குறிச்சியிலும், செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆயிரம் விளக்கிலும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி நாடாளுமன்றத்  இடைத்தேர்தலிலும் போட்டியிடுகிறார்கள்.
தமிழக பாஜக முகங்களாக இருக்கும் இவர்கள், தேர்தலில் போட்டியிடுவதால், அவர்கள் போட்டியிடும் தொகுதியிலேயே சுற்றி வருகிறார்கள். மற்ற தொகுதிகளுக்கு பிரசாரத்துக்கு செல்லாமல் உள்ளனர். இதனால், அக்கட்சியின் சார்பில் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள்   சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மாநில தலைவர்கள் எப்போது பிரசாரத்துக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். குறிப்பாக மாநிலம் முழுவதும் பிரச்சாரத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்படும் குஷ்பு, ஆயிரம் விளக்கு தொகுதியில் மட்டுமே முழு கவனம் செலுத்திவருகிறார்.
இதனையடுத்து பிற தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள், கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் தங்கள்  தொகுதிகளிலும் கவனம் செலுத்தும்படி வலியுறுத்த வேண்டும் என்று மேலிடத்தை நெருக்கிவருகிறார்கள். இதனால், தற்போது பாஜக மேலிடம், 20 தொகுதிகளுக்கும் அண்டை மாநிலங்களான கர்நாடகம், தெலங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது. மத்திய அமைச்சர்களையும் தமிழகம் செல்லும்படி கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தனிக்கவனம் செலுத்தும்படி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களுக்கும் பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!