
விஜயபாஸ்கர் குட்கா பாஸ்கராக மாறி டெங்கு பாஸ்கர் ஆகிவிட்டார் என்றும் நயவஞ்சகத்தின் மறு உருவம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்தான் என்றும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தடைசெய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, பான் போன்றவை சென்னையில் தடையின்றி கிடைப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டி வந்தார்.
அப்போது, சுகாதாரத்துறை அமைச்சர், சென்னை கமிஷனர் உள்ளிட்டோர் லஞ்சம் வாங்கி கொண்டு போதை பொருட்களை விற்க அனுமதி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சுகாதாரத்துறை அமைச்சருக்கு குட்கா பாஸ்கர் என பெயர் சூட்டினார்.
இந்நிலையில் தற்போது டெங்குவுக்கு ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்கு கட்டுப்பாட்டில் தான் உள்ளது என பேட்டி அளித்து வருகின்றார்.
இதைதொடர்ந்து சென்னை வில்லிவாக்கத்தில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட திமுக செயல்தலைவர் ஸ்டாலின், வீடு வீடாக சென்று துண்டுபிரசுரங்கள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின் டெங்கு குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவால் எந்த பயனும் ஏற்படாது எனவும், நயவஞ்சகத்தின் மறுஉருவம் விஜயபாஸ்கர் என விமர்சித்தார்.
தையிரியம் இருந்தால் குட்கா ஊழல் புகார் கூறியதற்காக தன் மீது வழக்கு தொடரட்டும் எனவும் சவால் விடுத்தார்.
எடப்பாடி பழனிசாமி அரசு இனியும் நீடிக்க கூடாது எனவும், விஜயபாஸ்கர் குட்கா பாஸ்கராக மாறி டெங்கு பாஸ்கர் ஆகிவிட்டார் என்றும் தெரிவித்தார்.