கண்காணிக்க போன இடத்தில் கரண்ட் கட்! அரசு மருத்துவமனையில் அல்லோலப்பட்ட 2 சுகாதார துறை அமைச்சர்கள்!

First Published Oct 15, 2017, 3:13 PM IST
Highlights
The Central Minister Ashwini Kumar Strain


கரண்ட் கட் ஆனதால், இரண்டாவது மாடியில் இருந்து தரை தளம் வருவதற்கு மத்திய சுகாதார துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே சிரமத்துக்கு ஆளான சம்பவம் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடந்தது.

மத்திய சுகாதார துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ராஜீவ்காந்தி மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் உள்ள வார்டை பார்வையிட்ட பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே, தமிழிசை சௌந்தரராஜன், விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவர்கள் சிலர் கீழே இறங்க லிஃப்ட் அருகே வந்தனர்.

மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே உள்ளிட்டோர் லிஃப்ட்-ல் ஏறினர். முன்னதாக விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன், மருத்துவர்கள் லிப்ஃடுக்குள் சென்றுவிட்டனர். பின்னர், அஸ்வினி குமார், லிப்டில் ஏறிய உடனேயே பவர் கட் ஆனது. லிப்டின் கதவு மூடுவதற்கு முன்பேயே கரண்ட் கட் ஆனதால், லிப்டுக்குள் மாட்டிக்கொள்ளாமல் அவர்கள் தப்பித்துக் கொண்டனர்.

பின்னர், முதல் தளம் இறங்கி செல்ல முயன்ற போது, படிக்கட்டின் கீழ் அமைந்துள்ள கதவு பூட்டப்பட்டிருந்தது. பூட்டை திறப்பதற்காக மருத்துவர்களும் ஊழியர்களும் முயன்றனர். ஆனால், பூட்டை திறக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவர்கள் தர்ம சங்கடத்துக்கு ஆளானார்கள்.

மத்திய அமைச்சரோ, மருத்துவர்களையும் தமிழக அமைச்சரையும் பார்க்க... அவர்களோ செய்வதறியாது திகைக்க... அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இந்த நிலையில் மீண்டும் கரண்ட் வந்ததை அடுத்து அனைவரும் லிப்ட் வழியாக தரைதளம் வந்திறங்கினார். 

இவ்வளவு கலேபரங்களுக்குப் பின்னர் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்த மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும், தமிழகத்தில் 6 மாதத்துக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறினார். 

click me!