முதல் ரெய்டு..! எம்.ஆர்.விஜயபாஸ்கரை குறி வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை..! பின்னணி என்ன?

By Selva KathirFirst Published Jul 23, 2021, 10:52 AM IST
Highlights

எஸ்பி வேலுமணி மற்றும் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கோபத்தில் இருப்பது அவரது பிரச்சாரங்களின் போதே வெளிப்பட்டது. கோவையில் பிரச்சாரத்திற்கு சென்ற போது அதிமுக நிர்வாகியை அனுப்பி ரகளை செய்ய வைத்ததால் எஸ்பி வேலுமணி திமுக ஆட்சிக்கு வந்த உடன் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

தமிழகத்தில் கடந்த ஐந்து வருட கால அதிமுக ஆட்சியில் பெரிய அளவில் சர்ச்சைகளில் சிக்காத அப்போதைய போக்குவரத்து துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிற்குள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென நுழைந்து சோதனை நடத்தியுள்ளனர்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதுமே லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனராக கந்தசாமி நியமிக்கப்பட்டார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்திவிட்டு திரும்பினார். இதனை அடுத்து முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி, முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பெயர்கள் தான் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை பட்டியலில் முதலில் இருந்தது.

இவர்களில் எஸ்பி வேலுமணி மற்றும் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கோபத்தில் இருப்பது அவரது பிரச்சாரங்களின் போதே வெளிப்பட்டது. கோவையில் பிரச்சாரத்திற்கு சென்ற போது அதிமுக நிர்வாகியை அனுப்பி ரகளை செய்ய வைத்ததால் எஸ்பி வேலுமணி திமுக ஆட்சிக்கு வந்த உடன் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதே போல் விருதுநகரில் பிரச்சாரத்தை முடித்து திரும்பிய மு.க.ஸ்டாலினை அப்போதைய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒருமையில் பேசியிருந்தார். இது தவிர கடந்த ஆட்சியில் அதிக முறைகேடு புகார்கள் எழுந்தது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் இல்லத்தில் தான்.

எனவே திமுக முதலில் இந்த மூன்று பேரில் ஒருவரைத்தான் குறி வைக்கும் என்று கருதப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறையும் கூட இவர்களை மையமாக வைத்தே ஆதாரங்களை திரட்டி வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டிற்குள் லஞ்ச ஒழிப்புத்துறை நுழைந்தது. ஏற்கனவே திட்டமிட்டபடி சரியாக காலை ஆறு மணிவாக்கில் கரூர், சென்னை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விஜயபாஸ்கர் தொடர்புடைய 21 இடங்களில் ரெய்டு தொடங்கியது. ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது 5 அதிகாரிகள் முதல் அதிகபட்சம் 20 அதிகாரிகள் வரை சோதனை நடத்தினர்.

கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த போது பேருந்துகளில் பொருத்த ஜிபிஆர்எஸ் மற்றும் வேகக்கட்டுபாட்டு கருவிகள் வாங்கப்பட்டன. இதே போல் அனைத்து லாரிகளிலும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டியது கட்டாயமானது. இந்த கருவிகளை குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்களில் இருந்து பெற்றால் மட்டுமே வாகனங்களுக்கு ஆர்டிஓ அலுவலகங்களில் பதிவுச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் தான் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடைபெற்றதாக கூறுகிறார்கள். அதே சமயம் கடந்த 5 வருடங்களில் கரூர், சென்னை, நாமக்கல் மாவட்டங்களில் விஜயபாஸ்கர் நிறைய சொத்துகளை குவித்ததாக புகார்கள் உள்ளன.

அதிலும் கரூரில் மருத்துவக்ல்லூரி அமைந்துள்ள இடங்களில் ஏக்கர் கணக்கில் விஜயபாஸ்கர் தொடர்பில் நிலம் வாங்கிப்போட்டுள்ளதாக சொல்கிறார்கள். இதன் அடிப்படையில் தான் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், சோதனை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மற்ற மாஜிக்களை விட்டுவிட்டு விஜயபாஸ்கர் வீட்டிற்கு ரெய்டு நடத்த வந்தது லஞ்ச ஒழிப்புத்துறையின் டெக்னிக் என்கிறார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுமே விஜயபாஸ்கர் சைலன்ட் ஆகிவிட்டார். கட்சி நடவடிக்கைகளில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

அதிமுக கவுன்சிலர்கள் கூண்டோடு திமுகவிற்கு சென்ற போது கூட விஜயபாஸ்கர் அமைதியாகவே இருந்தார். தான் சார்ந்த சமூக தலைவர்கள் மூலமாக செந்தில் பாலாஜியிடம் கூட அவர் சமரசம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனாலும் கூட முதல் ஆளாக அவர் தான் குறி வைக்கப்பட்டுள்ளார். இது திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டு என்கிறார்கள். சர்ச்சைகளில் சிக்காத விஜயபாஸ்கர் வீட்டிலேயே ரெய்டு என்றால் ஊழல் சர்ச்சைகளுடன் இருக்கும் மாஜிக்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!