
ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற தினகரன், தலைமை செயலகத்தல் எம்.எல்.ஏவாக பதவியேற்றார். சபாநாயகர் தனபால் தினகரனுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
தினகரனுடன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட அவரது ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் வந்திருந்தனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களும் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய தர்மசங்கடமான சூழல் உருவானது.
ஆர்.கே.நகரில் தினகரனின் வெற்றிக்குப் பிறகு தினகரனின் ஆதரவாளர்கள், அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு வருகின்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து தினகரன் வெற்றி பெற்றவுடன், வெற்றிவேல், புகழேந்தி, தங்க தமிழ்ச்செல்வன், சி.ஆர்.சரஸ்வதி, நாஞ்சில் சம்பத், கலைராஜன் ஆகியோர் நீக்கப்பட்டனர். இந்நிலையில், மேலும் 164 பேரை கட்சியிலிருந்து பழனிசாமியும் பன்னீர்செல்வமும் நீக்கியுள்ளனர்.
இப்படி, தினகரனின் ஆதரவாளர்களாக அறியப்படுபவர்களை அதிமுகவிலிருந்து களையெடுத்து வருகிறார்கள். ஆனால் தினகரனும் அவரது ஆதரவாளர்களும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் தொண்டர்களும் மக்களும் தங்கள் பக்கம்தான் உள்ளனர் என்றும் மார்தட்டி வருகின்றனர்.
இது இப்படி இருக்க, தற்போது கட்சியிலிருந்து நீக்கப்படுபவர்களுக்கு எல்லாம் முன்னோடி என்றால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தான். இந்த 164 பேர் இப்போது தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால், பழனிசாமி அரசுக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததற்காக தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி, வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களை கடந்த செப்டம்பர் 18ம் தேதி சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார்.
அந்த வகையில், தினகரன் ஆதரவாளர்கள் மீதான களையெடுப்பின் முதற்கட்ட நடவடிக்கை என்பது எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் தான். எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்தை தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரன், தலைமை செயலகத்தில் எம்.எல்.ஏவாக பதவியேற்றார். சபாநாயகர் தனபால், அவருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
தினகரனுடன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களும் சென்றிருந்தனர். அப்போது தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களும் தகுதிநீக்கம் செய்த சபாநாயகர் தனபாலும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய தர்மசங்கடமான சூழல் உருவானது. வெற்றிவேல், செந்தில் பாலாஜி ஆகியோர் தனபாலை பார்க்காமல், வேறு பக்கம் திரும்பியபடி நேரத்தை ஓட்டிவிட்டு வந்துவிட்டனர்.
பரஸ்பரம் கடுமையான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் ஆகியவை எல்லாம் அரசியலில் சகஜம்தான். கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினாலும் நேரில் பார்க்கும்போது எதிரெதிர் கட்சி தலைவர்கள் சிரித்து கொள்வதும் பேசிக்கொள்வதும் அரசியல் நாகரிகம். கொள்கை ரீதியாக எதிரெதிர் துருவங்களாக இருந்து அரசியல் செய்யும் கட்சிகளின் தலைவர்கள் என்றால்கூட, அரசியல் நாகரிகமான சந்திப்பும் புன்னகை உதிர்ப்பும் வழக்கமான ஒன்றுதான்.
ஆனால், ஒரே கட்சியில் ஒன்றாக இருந்தவர்கள் மீது பழிவாங்கும் ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களும் பாதிப்புக்கு உள்ளாக்கியவரும் நேருக்கு நேர் சந்திப்பது என்பது தர்மசங்கடமான ஒன்றுதான். ஆனாலும் பூங்கொத்து எல்லாம் கொடுத்து தினகரன் அசத்திவிட்டார்.