
நடிகர் சத்யராஜின் பிரச்சனைக்கு குரல் கொடுக்காத நடிகர் ரஜினிகாந்த், தமிழக அரசியல் பற்றி பேசுவதா என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், நடிகர் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து பேசினார். அப்போது தான் அரசியலுக்கு வருவது கடவுள் கையில் தான் இருக்கிறது என்றார். மேலும், தமிழகத்தில் நல்ல அரசியல் தலைவர்கள் இருந்தும் சிஸ்டமே கெட்டுப்போச்சே என கூற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு தெரிவித்து வந்த நிலையில் கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது; தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி, ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது. இரு அணிகள் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிச்சாமியும் இரு அணிகளும் இணைய வேண்டும் என்றே ஆசைப்படுகிறார்.
நடிகர் ரஜினிகாந்தை யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்களையே புகழ்ந்து பேசியிருக்கிறார். தமிழகத்தில் அரசியல் சிஸ்டம் கெட்டுப்போச்சு என கூறியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் சத்தியராஜுக்கு கர்நாடக அரசியல் கட்சிகளால் பிரச்சினை வரும்போது குரல் கொடுக்காத ரஜினிகாந்த், தமிழக அரசியல் பற்றி பேசுவதா, அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என கூறினார்.