பி.ஜே.பி.க்குள் அமைச்சர் வேலுமணியின் ஸ்லீப்பர் செல்கள்: தாறுமாறாய் கடுப்பாகும் தாமரை கோஷ்டி.

First Published Jan 27, 2018, 3:17 PM IST
Highlights
Vellumanis sleeper cells in the BJP


பி.ஜே.பி.யின் கண்ணசைவின் படியே இந்த ஆட்சி நடக்கிறது! என்கிற விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும் கூட, அவ்வப்போது மத்திய அமைச்சர்களுக்கும், தமிழக அமைச்சர்களுக்கும் உரசல் உச்சம் தொடத்தான் செய்கிறது. அதிலும் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியோடுதான் அடிக்கடி சிக்கலாகிறது.

சென்னையில் பெருமழையடித்தபோது! வெளிநாடுகளை விட இங்கே சிறப்பாக மழைநீர் வடிகால் முறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் வேலுமணி சொன்னதை பொன்னார் கலாய்க்க, இருவருக்கும் இடையில் உரசல் மூண்டது.

இந்நிலையில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனை எஸ்.பி.வேலுமணி மிரட்டியதாக வெடித்திருக்கும் விவகாரம் அடுத்த அணுகுண்டுதான்.
அதாவது தமிழக பி.ஜே.பி.யின் பொருளாளராக இருப்பவர் எஸ்.ஆர்.சேகர். இவர் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது ‘ராணுவ உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்பேட்டையை கோவையில் அமைக்க வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை வைத்து வந்தோம்.

சமீபத்தில் கோயமுத்தூர் வந்த இராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கே இருபது கோடி ரூபாய் செலவில் ராணுவத் தளவாட உதிரிபாக உற்பத்திக்கான தொழிற்பூங்கா அமைக்கப்படுமென அறிவித்தார். இதை அறிந்த கோயமுத்தூரை சேர்ந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ‘எங்கிட்ட கேட்காம எப்படி இதை செய்யலாம்?’

என்று நிர்மலா சீதாராமனை மிரட்டினார். இருபது கோடி ரூபாய்க்காக இந்த மிரட்டல். பைசா எங்கிருந்தாலும் அதை சுரண்டி எடுக்கக்கூடிய ஊழல்வாதிகளைக் கொண்டதாக இந்த மாநில அரசு மாறியுள்ளது.” என்று போட்டுப் பொளந்துவிட்டார்.

இது பரபரப்பாகி ஆளாளுக்கு விசாரிக்க, அதன்பின் எஸ்.ஆர்.சேகரோ ‘அந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் வேலுமணியை அழைத்திருந்தோம். ஆனால் அவர் வரவில்லை. இந்த நிலையில் நிர்மலா மேடம் அந்த திட்டத்தை அறிவித்துவிட்டனர்.

இதை அறிந்த பின் அங்கு வந்த அமைச்சர் தொழிற்துறையினரிடம் ‘நான் இல்லாம எப்படி இந்த விழாவை நடத்துனீங்க?’ என்று தொழிற்துறையினரைத்தான் மிரட்டினார். ராணுவ அமைச்சரை மிரட்டவில்லை. பொதுக்கூட்ட மேடையில் நான் தெளிவாக கூறாததால், இப்படி புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது.” என்று புது விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ஆனாலும் தமிழக பி.ஜே.பி. நிர்வாகிகள் சிலரோ “கோயமுத்தூரில் வேலுமணி எங்கள் கட்சியினரை வேண்டுமென்றே பல நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கிறார். ஸ்மார்ட் சிட்டி, தூய்மை இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கான கமிட்டி கோயமுத்தூரில் அமைக்கப்படும்போது கூட எங்கள் கட்சியினரை சேர்த்துக் கொள்வதில்லை அவர்.

இப்படி எங்களை புறந்தள்ளும் வேலுமணிக்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்துவதுடன், டெல்லி தலைமை மூலமாக வேலுமணிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கலாமென்று திட்டமிடுகிறோம். ஆனால் எங்கள் கட்சிக்குள் இருக்கும் சில முக்கிய நபர்கள் வேலுமணிக்கு ஆதரவான ஸ்லீப்பர் செல்களாக இருக்கின்றனர்.

இவர்கள் எங்களது எல்லா பிளான்களையும் ஸ்மெல் செய்து வேலுமணியிடம் போட்டுக் கொடுத்து தங்களுக்கான காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர். என்ன செய்ய?”
- என்று புலம்பித் தீர்த்துள்ளனர்.

 

click me!