
தமிழ்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை தருவது தனிமனிதனின் கடமை என்றும், யாராக இருந்தாலும் எழுந்து நின்று மரியாதை தரவேண்டும் என்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய் கிழமை சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது காஞ்சி இளைய சங்கராச்சாரி விஜயேந்திரர் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார். இதனால் கடுப்பான தமிழ் ஆர்வலர்கள், தமிழ்தாய் வாழ்த்து என்ன அவ்வளவு கேவலமானதா ? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இது தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அவர் மன்னிப்புக்கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காஞ்சி சங்கர மடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் அமைப்புகள் முயன்று வருகின்றன. இதனால் சங்கர மடம் பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இது குறித்து செய்தியாள்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ், தமிழ்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை தருவது தனிமனிதனின் கடமை என்றும், யாராக இருந்தாலும் எழுந்து நின்று மரியாதை தரவேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பேருந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் 7 ஆண்டுகளாக உயர்த்தப்படாத பேருந்து கட்டணம் தற்போது டீசல் விலை உயர்வால் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் ஓபிஎஸ் கூறினார்