வேலூரை நூலிழையில் கோட்டைவிட்ட எடப்பாடி... கடுங்கோபத்தில் அமித்ஷா...!

By vinoth kumarFirst Published Aug 9, 2019, 5:56 PM IST
Highlights

வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் தோல்வியால் அமித்ஷா, பிரதமர் மோடி தரப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் கோபத்தில் உள்ளதாகவும் அவர்களின் நேரடி தொடர்பில் உள்ளவர்களின் மூலம் முதல்வருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது.

வேலூர் நடாளுமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி நூலிழையில் கோட்டைவிட்டதால் அவர் மீது மோடி, அமித்ஷா தரப்பினர் கடும் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்கனவே 37 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. அதிமுக சார்பில் ஒ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டும் தேனி தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி. ஆகி உள்ளார், வேலூர் நாடாளுமன்ற வெற்றியின் மூலம் திமுக மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது. திமுகவின் பணபட்டுவாடா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு ,   மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான வாக்குப்பதிவு கடந்த ஆகஸ்டு 5-ம் தேதி நடைபெற்றது.

 

வேலூர் நாடாளுமன்ற தொகுதியை எப்படியாவது கைப்பற்றியே ஆகவேண்டும் எனவும் வேலூரில் தோற்றால் அதை வைத்து எதிர்கட்சிகள் பாஜகவின் மீதுள்ள வெறுப்பினால் தான் தமிழகத்தில் அதிமுக கூட்டணி தோல்வியடைந்துவிட்டது என குறைகூறுவதுடன் அதைவைத்து எதிர்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக பெரிய அளவில் பிரச்சாரம் செய்ய அது வாய்ப்பாக அமைந்துவிடும். எனவே வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் என்ன விலை கொடுத்தேனும் வெற்றிபெற்றாக வேண்டும் என்று மத்தியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

ஏ.சி சண்முகம் தடபுடலாக தேர்தலை கவனித்துகொள்வார் என்றாலும் கூட, தன்னுடைய அமைச்சர் பட்டாளத்தை வேலூரில் முகாமிட வைத்து தேர்தல் வேலைகளை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார் முதலமைச்சர் பழனிச்சாமி. அதிமுக, திமுக என இரண்டு தரப்பினரும் படுவேகமாக வேலை பார்த்ததில் வெற்றி தங்களுக்குதான் என்று இரண்டு தரப்பினரும் கூறிவந்தனர். அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் 7-வது சுற்றுகள் வரை அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் 15.000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்தார்.  

ஆனால், வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு பெட்டிகள் அதிமுகவிற்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. 8-வது சுற்றிலிருந்து முன்னிலை கணக்கை தொடங்கிய கதிர் ஆனந்த், 21-வது சுற்றுவரை தொடர்ந்து முன்னிலை வகித்து இறுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை விட சுமார் 8 ஆயிரத்து 141 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போராடி தனது வெற்றியை அதிமுக  நூலிழையில் தவறவிட்டது. 

வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் தோல்வியால் அமித்ஷா, பிரதமர் மோடி தரப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் கோபத்தில் உள்ளதாகவும் அவர்களின் நேரடி தொடர்பில் உள்ளவர்களின் மூலம் முதல்வருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தோல்வியை ஈடுகட்ட தமிழகத்தில்  காலி தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இந்த இடைதேர்தலிலாவது வெற்றிபெற்று காட்டவேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கு மோடி அமித்ஷா தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

click me!