வேலூர் வெற்றிக்கு உலைவைத்த ஓபிஎஸ்...? புலம்பி தள்ளும் ஏ.சி.சண்முகம்..!

By vinoth kumarFirst Published Aug 9, 2019, 6:17 PM IST
Highlights

வேலூர் மக்களவை தொகுதியில் கடுமையான போட்டிகளிடையே திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏ.சி.சண்முகத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் என்று கூறப்படுகிறது. 

வேலூர் மக்களவை தொகுதியில் கடுமையான போட்டிகளிடையே திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏ.சி.சண்முகத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் என்று கூறப்படுகிறது. 

வேலூர் தொகுதியில் முஸ்லீம் வாக்காளர்கள் அதிகம். ஆம்பூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளில் வெற்றியை தீர்மானிக்க கூடியவர்கள் முஸ்லீம்கள் தான். இதனால் இந்த இரண்டு தொகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே ஏசிஎஸ் ஸ்பெசல் கவனிப்புகளை செய்து வந்தார். ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி என்பதால் முஸ்லீம்கள் பகுதியில் சண்முகத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. 

ஆனால், அந்த பகுதியில் தனது சொந்த செலவில் சில பல திட்டங்களை அறிவித்து அவர்களை கவர பகீரத முயற்சி மேற்கொண்டு வந்தார் ஏசிஎஸ். ஏனென்றால் கடந்த 2014 தேர்தலில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட ஏசிஎஸ் தோல்வி அடைந்திருந்தார். அப்போதும் கூட வேலூரில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி தொகுதிகள் தான் ஏசிஎஸ்சை கவிழ்த்திருந்தது. இதனால் தான் இந்த முறை அந்த பகுதிகளுக்கு ஸ்பெசல் கவனிப்புகள் நடந்து வந்தன.

 

இந்நிலையில், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதா மீது ஓபிஎஸ் மகனும் அதிமுக நாடாளுமன்ற குழு தலைவருமான ரவீந்திரநாத் பேசினார். அப்போது முத்தலாக் தடை மசோதா முஸ்லீம் பெண்களை பாதுகாப்பதற்கானது என்று கூறியதுடன் அதனை அதிமுக முழுமையாக ஆதரிப்பதாக கூறினார். இதனை கேட்டு யாருக்கு அதிர்ச்சியாக இருந்ததோ தெரியாது. ஆனால் ஏசிஎஸ் மற்றும் எடப்பாடி இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்திருப்பார்.

இதனையடுத்து ஆகஸ்ட் 5-ம் தேதி வேலூர் மக்களை தொகுதி தேர்தல் நடைபெற்றது. அதில், பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி 7-வது சுற்று வரை சி.வி.சண்முகம் முன்னிலையில் இருந்து வந்தார். இதனையடுத்து, 8-வது சுற்றில் இருந்து 21-வது சுற்று வரை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை இருந்து வந்தார். இறுதியில் சுமார் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 

இதனிடையே, முஸ்லீம் வாக்காளர்கள் நிறைந்த வாணியப்பாடி, ஆம்பூர் தொகுதியில் கணிசமான வாக்குகளை அதிமுக கூட்டணி இழந்துள்ளது.  வாணியம்பாடியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் - 90,718 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 68,923 வாக்குகள் பெற்றனர். 21,795 வாக்குகள் திமுக அதிகமாக பெற்றுள்ளது. அதேபோல் வேலூர், ஆம்பூர் தொகுதியிலும் இதே நிலைமை தான். ஆகையால், வேலூர் மக்களவை தோல்விக்கு துணைமுதல்வர் ஓபிஎஸ் தான் காரணம் என ஏ.சி.சண்முகம் புலம்பி தள்ளியுள்ளார். 

click me!