
மற்ற கட்சிகளுக்கு உபதேசம் செய்யும் பிரதமர், பா.ஜ.க. தலைவர்கள் கல்யாண்சிங்கையும், உமாபாரதியையும் தத்தம் பதவிகளை ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும் என்று திராவிடக் கழகத் தலைவர் வீரமணி கூறியுள்ளார்.
இது குறித்து வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “1992 இல் பாபர் மசூதி இடித்த வழக்கில் குற்றவாளிகளான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, கல்யாண்சிங், செல்வி உமாபாரதி, வினய் கட்டியார், வி.எச்.டால்மியா, சாத்வி ரிதம்பரா முதலிய பலரும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அக்கிரிமினல் வழக்கு லக்னோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு - இரண்டு ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு 18.4.2017 அன்று தீர்ப்பளித்துள்ளது.
25 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில், ‘வெள்ளி விழா’ காணும் இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பிரதான குற்றவாளிகளான அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்கள் மத்திய அமைச்சர்களாகவே இருந்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர் பதவிகளில் அத்வானி இருந்துள்ளார். முரளிமனோகர் ஜோஷி மத்திய மனித வளத்துறை அமைச்சராகவும், உமாபாரதி மத்திய அமைச்சராகவும், முதலமைச்சராகவும்கூட இருந்துவிட்ட கூத்தும் நடந்திருக்கிறது. இப்பொழுதும் மத்திய அமைச்சராக இருக்கவும் செய்கிறார்.
மற்ற கட்சிகளை ஊழல்வாதிகள் என்று கூறி, பதவி விலகிடச் சொல்லும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்., ஆளுநராக இருக்கும் கல்யாண் சிங், மத்திய நீர் வளத்துறை அமைச்சராக இருக்கும் உமாபாரதி (இந்த அம்மையார், ‘ஆம்! நான்தான் இடித்தேன்’ என்று இப்போதும் உரக்கக் கூவுகிறார்!) இவர்களை பதவி விலகச் சொல்ல வேண்டாமா?
நம் நாட்டு சட்ட வழக்குகள் இப்படி வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா, முத்து விழா - நூற்றாண்டு விழா கொண்டாடும் அவல நிலைக்கு - நீதித்துறை ஒரு முற்றுப்புள்ளி வைக்க இனிமேலாவது முன்வரவேண்டாமா?
உச்சநீதிமன்றத்தில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷிக்காக வாதாடிய மூத்த வழக்குரைஞர் அவர்கள் தங்களது முதுமை காரணமாக 4 மாடிகள் ஏறி இறங்க முடியாது என்று ‘‘அய்யோ பரிதாபம் ஆர்கியூமெண்டையும்‘’ செய்து பார்த்துள்ளனர், எடுபடவில்லை!
என்றாலும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்டீஸ் கோஷ், ஜஸ்டீஸ் நாரிமன் - வழக்கினை இரண்டு ஆண்டுகளுக்குள் தொடர்ச்சியாக நடத்த உத்தரவிட்டுள்ளனர்.
மற்ற கட்சிகளுக்கு உபதேசம் செய்யும் பிரதமர், பா.ஜ.க. தலைவர்கள் கல்யாண்சிங்கையும், உமாபாரதியையும் தத்தம் பதவிகளை இராஜினாமா செய்யச் சொல்லி ஆணை பிறப்பித்து பொது ஒழுக்கச் சிதைவுக்கு வழி ஏற்படாமல் தடுக்கவேண்டாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.