Seeman: பஞ்சாயத்து தலைவருக்கு கூட வக்கில்லை... இதில் ஆட்சியா? சீமானை செஞ்ச வன்னியரசு...

By manimegalai aFirst Published Dec 20, 2021, 8:20 AM IST
Highlights

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை மாற்றுவோம் என்று கூறிய சீமானை பஞ்சாயத்து தலைவருக்கு கூட வக்கில்லாமல் ஆட்சியை பற்றி பேசுகிறார் என்று விசிகவின் வன்னியரசு போட்டு தாக்கி இருக்கிறார்.

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை மாற்றுவோம் என்று கூறிய சீமானை பஞ்சாயத்து தலைவருக்கு கூட வக்கில்லாமல் ஆட்சியை பற்றி பேசுகிறார் என்று விசிகவின் வன்னியரசு போட்டு தாக்கி இருக்கிறார்.

டிசம்பர் மாதம் 17ம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை, தமிழக அரசின் மாநில பாடலாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். வாழ்த்து பாடும் போது அனைவரும் தவறாது எழுந்துநிற்க வேண்டும், ஆனால் மாற்று திறனாளிகளுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்தன. அதே நேரத்தில் அரசியல் கட்சிகளிடம் இருந்து வழக்கமான எதிர்ப்புக்குரல்களும், கண்டனங்களும் எழுந்தன.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவர் கூறியதாவது: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தமிழக அரசு தந்திருக்கும் அங்கீகாரத்தை வரவேற்கிறோம், ஆனால் முழு வாழ்த்துப் பாடலையும் பாட வேண்டும்.

ஆனால் மனோன்மணியம் சுந்தரனார் இப்போது இருந்திருந்தால் சில வரிகளை நீக்கி இப்போது பயன்படுத்தப்பட்டு வரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஏற்று கொண்டிருக்க மாட்டார். எனவே முழு பாடலையும் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

பாஜக மகளிரணி தேசிய தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனும் இதே கருத்தை தான் வலியுறுத்தி இருக்கிறார். பாஜகவின் இந்த தமிழ்த்தாய் வாழ்த்து அரசின் பின்னணியில் திமுகவின் இறைமறுப்பு என்ற சித்தாந்தம் ஒளிந்திருப்பதால் தான் கடுமையாக எதிர்க்கிறது என்று அரசியல் விமர்சகர்களும் கூறி உள்ளனர்.

பாஜக போன்று நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து இருக்கிறது. வழக்கம் போல திமுகவை கொத்து பரோட்டாவாக்கி, உணர்ச்சி பிளம்பாய் பேசி தளும்பும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுகவை விமர்சித்து இருக்கிறார்.

சென்னை சின்னபோரூரில் கிஆபெ விசுவநாதம் நினைவேந்தல் கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவோம். இப்போது இருக்கும் பாடலுக்கு பதிலாக வேறு ஒரு பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக இருக்கும்.

முழு பாடலையும் கொண்டு வரவேண்டும் என்று பாஜக சொல்வதை பாராட்ட வேண்டும் என்று கூறி இருந்தார்.

பாஜகவின் தமிழ்த்தாய் வாழ்த்து அரசியலை பற்றியும், சீமானின் இந்த பாஜக ஆதரவு கருத்து பற்றியும் பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.

இந் நிலையில், சீமானின் இந்த பேச்சை விசிகவின் வன்னியரசு கண்டித்து இருப்பதோடு பஞ்சாயத்து தலைவராக கூட ஆகாத நாம் தமிழர் கட்சி எப்படி ஆட்சியமைத்து பாடலை மாற்றும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து வன்னியரசு தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: பாஜகவின் முயற்சிக்கு பாராட்டு. அய்யா மனோன்மணியம் சுந்தரனார் உள்ளிட்ட தமிழறிஞர்களின் முயற்சியை அரசாணை பிறப்பித்தால் வன்மம்.

இதற்கு பெயர் தான் சங்கித்தனம் என்பது. இதைச்சொன்னால் செருப்பை தூக்கும் வக்கிரத்தனம். ஒரு பஞ்சாயத்து தலைவருக்கு கூட வக்கில்லை. இதில் ஆட்சியா? என்று காட்டமாக கூறி இருக்கிறார் வன்னியரசு.

விசிக வன்னியரசுவின் இந்த கண்டனத்துக்கு வழக்கம் போல நாம் தமிழர் தம்பிகள் பதில் கண்டனத்தை உருட்ட ஆரம்பிக்க, விசிகவும் விடாது பதிலடி கொடுத்து வருகின்றனர். அடுத்து ஏதாவது அரசியல் பிரச்னை வரும் வரை இவ்விரு கட்சிகளும் இதையே இப்படிக்கா, அப்பிடிக்கா என்று உருட்டிக் கொண்டு இருக்கும் என்று கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்..!!

click me!