லட்சக்கணக்கில் செலவு செய்பவர்களே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்... ஆதாரத்துடன் விளக்கிய திருமா..!

By Asianet TamilFirst Published Oct 17, 2020, 9:56 PM IST
Highlights

லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து தனிப்பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வுமுறை பயன்படும் என்பதை ஜீவித்குமாரின் வெற்றி உறுதி செய்வதாக உள்ளது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த முடிவுகள் இந்தத் தேர்வுமுறை தனிப்பயிற்சி நிலையங்களின் கொள்ளைக்குத்தான் உதவியாக இருக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கின்றன. எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
நீட் தேர்வில் அரசுப் பள்ளிகளில் அனைத்து இந்திய அளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பெற்றிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. வெற்றிபெற்ற மாணவர் ஜீவித்குமாருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் அவர் வெற்றி பெற்றிருப்பது என்பது அரசுப் பள்ளி மாணவர்கள் இந்தத் தேர்வில் வெற்றிபெற வேண்டுமென்றால் கூடுதலாக ஒரு ஆண்டையும் லட்சக்கணக்கான ரூபாயையும் செலவழிக்கவேண்டும் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.


தற்போது வெற்றிபெற்றுள்ள மாணவர் ஜீவித்குமார் கடந்தாண்டு நீட் தேர்வில் 720 க்கு 193 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். கடந்த ஓராண்டாக நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் லட்சக்கணக்கான ரூபாயைக் கட்டணமாக செலுத்தி பயிற்சி பெற்ற பிறகுதான் இந்த 664 மதிப்பெண்களை அவரால் பெற முடிந்திருக்கிறது. கடந்தாண்டு 12ம் வகுப்புத் தேர்வில் 600க்கு 548 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்திலேயே முதலாவது மாணவராக அவர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை. லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து தனிப்பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வுமுறை பயன்படும் என்பதை ஜீவித்குமாரின் வெற்றி உறுதி செய்வதாக உள்ளது.
நீட் தேர்வுக்கான வினாக்களில் 90-விழுக்காடு வினாக்கள் மாநிலப் பாடத்திலிருந்து கேட்கப்பட்டிருக்கிறது. எனவே நம்முடைய பாடத் திட்டம் மிக சிறப்பாக இருக்கிறது என்று சில மாதங்களுக்கு முன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெருமைப்பட்டுக் கொண்டார். அதுமட்டுமின்றி நீட் தேர்வில் வெற்றி பெறுவது கடினம் அல்ல என்பது போன்ற ஒரு கருத்து அவரது கூற்றில் தொனித்தது. அது தவறானது என்பதை இந்த ஆண்டு தேர்வு முடிவுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. நீட் தேர்வு என்பது ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது என்பதையும், இது பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பு வாய்ப்பை வழங்கக் கூடியது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஒன்பது சதவீத மாணவர்கள் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 2570 மாணவர்கள் குறைவாகவே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களும் 1461 பேர் குறைவு. நீட் தேர்வு வேண்டாம் என ஒருபுறம் கூறிக்கொண்டு அது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இயற்றி அனுப்பிய சட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவதில் எவ்வித அக்கறையும் இல்லாமல் தமிழக அரசு உள்ளது. நீட் தேர்வை ரத்துசெய்வதில் தமிழக அரசுக்கு ஆர்வம் இல்லை என்பது தெளிவாகிறது. நீட் தேர்வு குறித்த அரசின் நிலைபாட்டை தமிழக முதல்வர் மக்களுக்கு விளக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.” என்று அறிக்கையில் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

click me!