ரஜினி சொத்துவரியை பேசியவர்களே.. கவுதம சிகாமணியின் சட்டத்துக்கு புறம்பான சொத்தை பேசுங்கள்.. தமிழருவி பொளேர்..!

By Asianet TamilFirst Published Oct 17, 2020, 9:37 PM IST
Highlights

ரஜினி மாநகராட்சிக்குச் சொத்து வரி கட்ட மறுக்கிறார் என்று கூப்பாடு போட்டவர்கள், கவுதம் சிகாமணியின் சட்டத்திற்குப் புறம்பான சொத்து விவகாரம் குறித்துக் கொஞ்சம் வாய் திறந்தால் நல்லது என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின்றி 2008-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தாவில் உள்ள பிடி எக்செல் மெகிண்டோ என்னும் நிறுவனத்தில் சட்டவிரோதமாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களுக்குப் பங்குகளை வாங்கி முதலீடு செய்துள்ளார். ஐக்கிய அரபு நாடுகளின் நிறுவனம் ஒன்றில் 55,000 அமெரிக்க டாலர்களை அவர் முதலீடு செய்துள்ளார். இந்த முதலீடுகள் பொன்முடி கருணாநிதி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் உயர் கல்வி அமைச்சராக இருந்தபோது செய்யப்பட்டன என்பது நம் சிந்தனைக்குரியது.
அமலாக்கத்துறையின் விசாரணையின் விளைவாக கவுதம் சிகாமணியின் 8.60 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வளவு சொத்து சிகாமணிக்கு எப்படி வந்து சேர்ந்தது என்பது ஆய்வுக்குரியது. இந்த மோசடி 2008-ல் நடந்தது. மு.க. ஸ்டாலின் இவரைத்தான் 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக நிறுத்தினார். சட்ட விரோத செயலில் ஈடுபட்ட சிகாமணி இன்று சட்டமியற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்.
திமுகழகத்தின் தலைவர்கள் அனைவருமே அறத்திற்குப் புறம்பாகச் சொத்துகளைக் குவித்து எவ்வித உறுத்தலுமின்றி ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள்தான். இவர்கள் அனைவருக்கும் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்; அதிகாரத்தில் அமர்ந்ததும் தவறான வழியில் பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்க வேண்டும். மக்கள் நலன் என்பதெல்லாம் வெறும் வாய் வார்த்தைகளில் மட்டும்தான். இதில் இரு திராவிட கட்சிகளுக்கிடையில் எள்மூக்கின் முனையளவு கூட வேற்றுமையில்லை. இந்த இரண்டு கட்சிகளுமே பாழ்பட்ட பாத்திரங்கள். இவற்றில் உள்ளதெல்லாம் கெட்டுப்போன உணவு மட்டுமே.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் பொன்முடி, நேரு, எ.வ. வேலு, துரைமுருகன் போன்ற ஊழலின் நிழல்கூடப் படாத உத்தமர்கள்தான் அமைச்சர்களாக அமர்ந்து புத்தபரிபாலனம் செய்வார்கள். கனிமொழி, ஆ.ராசா, பாலு, சிகாமணி, கெகத்ரட்சகன், தயாநிதி போன்றவர்கள்தான் மத்திய அமைச்சர்களாகவோ, சட்டமியற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ செயற்படுவார்கள். காரணம்.. இவர்கள் அனைவரும் கனவில் கூட கறைபடியாதவர்கள். இவர்களை நியாயப்படுத்த இங்கே எத்தனை அறிவுஜீவிகள்! இவர்கள் கேழ்வரகில் நெய்யெடுக்கும் ஆற்றல் மிக்கவர்கள். பாவம் தமிழகம்.


ரஜினி மாநகராட்சிக்குச் சொத்து வரி கட்ட மறுக்கிறார் என்று கூப்பாடு போட்டவர்கள், கவுதம் சிகாமணியின் சட்டத்திற்குப் புறம்பான சொத்து விவகாரம் குறித்துக் கொஞ்சம் வாய் திறந்தால் நல்லது. வழக்கப்படி இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்ற பல்லவியை இவர்கள் பாடினால், பெரியார் சொன்னது போல் அறிவு நாணயம் இல்லாதவர்கள் என்ற முடிவிற்கே நாம் வரமுடியும். இன்று நமக்குள்ள ஒரே மாற்று மருந்து ரஜினியின் அரசியல் வருகைதான்.” என்று அறிக்கையில் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். 

click me!