
தனது ஆளுமையை பயன்படுத்தி அதிமுக திமுக என இரண்டு கட்சிகளையும் ஒரு பொம்மை போல விளையாடியவர் மருத்துவர் ராமதாஸ் எனவும், அவர் மிகவும் சாதுரியமானவர் என்றும், மிகச் சிறந்த அரசியல் ஆளுமை என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் மருத்துவர் ராமதாசை மனம் திறந்து பாராட்டியுள்ளார். ராமதாஸ் தொடர்ந்து சமூக நீதி பாதையில் பயணித்திருந்தால் அவர் தேசிய அளவில் கன்சிராமைப் போல மிகப்பெரிய தலைவராக உயர்ந்து இருப்பார் என ஏற்கனவே திருமாவளவன் அவரை பாராட்டிய நிலையில் தற்போது மீண்டும் ராமதாசை எவ்வாறு புகழ்ந்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தான் முன்னின்று நடத்திய இட ஒதுக்கீடு போராட்டத்தின் மூலம் சமூக நீதி காவலராக அறியப்பட்ட டாக்டர் ராமதாஸ். 1980 ஜூலை 20 இல் தொடங்கி அவரது போராட்டம் வட மாவட்டங்கள் முழுவதும் பரவியது. வன்னிய சமூகத்திற்கு மாநிலத்தில் 20 சதவீத இட ஒதுக்கீடு மத்தியில் 2 சதவீத தனி ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இட ஒதுக்கீட்டை 18 லிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் ஒரு வாரம் போராட்டம் வெடித்தது. வீரியமிக்க அந்தப் போராட்டத்தில் 20 பேர் தங்கள் இன்னுயிரை நீத்தனர். மாநில சட்ட ஒழுங்கு கைமீறி போனதை உணர்ந்த அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட வன்னியர் சங்க தலைவர்களை அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக வன்னியர் சமுதாயம் உள்ளிட்ட 108 சமுதாயங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற புதிய பட்டியலில் இணைத்து 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது. அது முதல் தமிழகத்தின் இட ஒதுக்கீடு போராளி தலைவராகவும் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக இருந்து வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
ஒரு கட்டத்தில் தமிழகத்தில் அதிமுக திமுக என இரண்டு கட்சிகளில் வெற்றியையும் தீர்மானிக்கக் கூடிய சக்தியாக வளர்ந்தார் ராமதாஸ். பாமக அரசியல் நிலைப்பாடு என்பது காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கிறது என்ற விமர்சனம் பின்னாளில் அக்கட்சியின் மீது எழுந்தது. ஒருகட்டத்தில் கூட்டணிக்காக கொள்கை இழந்தவர் ராமதாஸ் என்ற விமர்சனத்துக்கும் அவர் ஆளானார். 2011 இல் திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று கூறிய ராமதாஸ் 2019 இல் அதிமுக உடன் கூட்டணி வைத்து நாடாளுமன்ற தேர்தலில் களம் கண்டார். அதேபோல் வெற்றி யாருக்கு என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கேற்ப கூட்டணி வேலை வீசுவதே பாமகவின் வாடிக்கை என்ற விமர்சனம் அக்கட்சியின் மீது இருந்து வருகிறது. 1998 மக்களவைத் தேர்தல் முதல் 2001 சட்டமன்ற தேர்தல் வரைக்கும் தொடர்ந்து திமுக அதிமுக பாஜக என மாறி மாறி கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டு வருகிறது பாமக. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் பாமகவின் கூட்டணி வியூகம் எடுபடவில்லை. 2009-2021ல் நடைபெற்ற தேர்தல்கள் என அனைத்திலும் அக்கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
குறிப்பாக கடைசியாக பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்த விவகாரம் பெரும் விமர்சனத்திற்குள்ளானது. காரணம் அன்புமணி ராமதாஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அதிமுக அமைச்சர்கள் மீது 24 ஊழல் அடங்கிய புகார் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்ததுடன், அப்போதைய அதிமுக அமைச்சர்களை மிக தரக்குறைவாக பேசி வந்தே அதற்கு காரணம். பின்னர் அதே அதிமுகவுடன் எப்படி கூட்டணி வைத்தார் என்ற விமர்சனம் பாமக மீது கடுமையாக எழுந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு பாமகவுடன் கூட்டணி வைத்ததே காரணம் என அதிமுக முன்னணி தலைவர்கள் வெளிப்படையாகவே பேசத் தொடங்கினர். ஆனாலும் கூட்டணி தொடர்ந்தது. ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து பாமக தனக்கு செல்வாக்கு மிகுந்த பகுதிகளில் களம் கண்டும் எதிர் பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில் கடுமையான வீழ்ச்சிக்கு பாமக தள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், பாமக என்ற கட்சி துவங்கப்பட்டு 35 ஆண்டுகள் கடந்து விட்டது ஆனால் கூட பாமக ஆட்சிக்கு வரமுடியவில்லை இது என்னுடைய தவறா அல்லது தொண்டர்களின் தவறா? ஏன் நம் கட்சி நடத்த வேண்டும்? கலைத்து விடலாம் என்று பேசினார். கட்சி நிர்வாகிகள் கட்சிகளுக்கு உண்மையாக இல்லை. அப்படிப்பட்டவர்கள் காட்சியிலிருந்து தயவுசெய்து விலகிவிடுங்கள் என தொடர்ந்து அதிருப்தி வெளிப்படுத்தும் வகையில் அவர் பேசி வருகிறார்.
வன்னியர் சமூகம் ஆண்டபரம்பரை சமூகம் ஒருகாலத்தில் ஆண்டவர்கள் இப்போது அடிமையாகிக் கிடக்கிறார்கள். எதிர்வரும் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் முதல்வராக வேண்டும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜெய்பீம் விவகாரத்தில் அரசியல் செய்வதற்கு காரணங்கள் இல்லாததால் நடிகர்களை வைத்து பாமக அரசியல் செய்துகொண்டு இருக்கிறது என்ற விமர்சனத்திற்கு அக்காட்சி ஆளான நிலையில் ஆண்ட பரம்பரை என்ற அவரின் பேச்சு கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ராமதாஸ் மிகச்சிறந்த ஆளுமை மிக்க தலைவர், சமூகநீதி தலைவராக அறியப்பட்டவர் தலித் வெறுப்பு அரசியலை அவர் கையில் எடுத்ததால் வீழ்ந்துவிட்டார் என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் கொடுத்துள்ள பேட்டியின் விவரம் பின்வருமாறு:-
என்னைப் பொறுத்தவரையில் தனது அரசியல் வலிமையைப் பயன்படுத்தி மிகவும் சாதுரியமாக திமுகவையும் அதிமுகவையும் ஒரே நேரத்தில் கையாண்டவர் அவர், இங்கு இல்லை என்றால் அங்கு என்ற வகையில் இரண்டு கட்சிகளையும் டீல் செய்தவர் அவர். அவர் சந்தர்ப்பவாதமாக செயல்படுபவர் என்பதைக் காட்டிலும் இரண்டு கட்சிகளையும் தன்னுடைய கையில் இரண்டு பொம்மைகளைப் போல வைத்து விளையாடியவர் ராமதாஸ். ஆனால் அப்படிப்பட்ட ராமதாஸ் இப்போது ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் உள்ளிட்ட அமைப்புகள் வீசிய வலையில் சிக்கி உள்ளார். இல்லையென்றால் அவர் நினைத்ததை இன்று அவரால் சாதித்திருக்க முடியுத். சமூக நீதி பாதையில் அவர் தொடர்ந்து பயணித்திருந்தால் இந்நேரத்திற்கு அவர் நினைத்ததை எல்லாம் சாதித்திருக்க முடியும். ராமதாஸ் நினைத்திருந்தால் தலித்துகள் பழங்குடிகள், ஓபிசி சமூக மக்களின் ஒப்பற்ற தலைவராக உயர்ந்து இருக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு ஒருங்கிணைப்பு ஆற்றல் அவரிடம் இருந்தது. பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்ற தலைவர்களை தனது கொள்கை ஆசானாக அவர் வெளிப்படுத்தியவர். இந்தியாவில் வேறு எந்த தலித் அல்லாத ஒரு தலைவரும் தனது கட்சிக் கொடியில் நீல நிறத்தை இணைத்தவர்கள் அல்ல. முதல்முறையாக ராமதாஸ் நீல நிறத்தை பாமக கொடியில் இணைத்தார்.
இந்தியாவில் எந்த கட்சியும் தனது கட்சியில் ஒரு நிரந்தரமாக தலித் ஒருவர்தான் பொதுச்செயலராக இருக்கவேண்டும் என்று அறிவிப்பு செய்தது இல்லை. ஆனால் ராமதாஸ் அதை செய்தார். இந்தியாவில் எந்த ஒரு தலித் அல்லாத தலைவரும் நான் 100 அம்பேத்கர் சிலைகளை திறப்பேன் என்று கூறவில்லை, அதை கூறியவர் ராமதாஸ்தான் இன்றளவுக்கும் வடமாவட்டங்களில் அம்பேத்கர் சிலைகள் பரவலாக இருப்பதற்கு ராமதாஸ் தான் காரணம். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோருடைய கொள்கைகளில் நின்று தலித் மக்களையும் பழங்குடியின மக்களையும் அரவணைத்து அவர் சென்றிருந்தால் மிகப்பெரிய தலைவராக வந்திருப்பார் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.