
லஞ்ச புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதியை சஸ்பெண்டு செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றிய கணபதி, அங்கு வேதியியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் சுரேஷ் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது ஊழல் தடுப்பு காவல் துறையினரால் கையும், களவுமாக பிடிபட்டார்.
கணபதியுடன் , வேதியியல் துறை பேராசிரியர் என்.தர்மராஜூம் கைது செய்யப்பட்டார். தனது தகுதிகாண் பருவத்தை நிறைவு செய்வதற்காகத் துணைவேந்தர் ரூ.30 லட்சம் கேட்பதாக டி.சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் சுமார் 12 மணி நேர விசாரணைக்குப் பிறகு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கோவை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருச்தனர் . அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வரும் 8 ஆம் தேதிக்குள் நாளை மறுநாளுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து, தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.