நாங்க குப்பை அள்ளுறவங்க இல்ல.. மத்திய அரசை வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்

 
Published : Feb 06, 2018, 03:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
நாங்க குப்பை அள்ளுறவங்க இல்ல.. மத்திய அரசை வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்

சுருக்கம்

supreme court judges slams central government

திடக்கழிவு மேலாண்மை குறித்த முழுமையான தகவல்கள் இல்லாத 845 பக்க பிரமாண பத்திரத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாங்கள் ஒன்றும் குப்பை பொறுக்குபவர்கள் அல்ல என்று மத்திய அரசை மிகக் கடுமையாக சாடியுள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு டெல்லியில் 7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தான். இவனுக்கு சிகிச்சை அளிக்க டெல்லியில் 5 பெரிய மருத்துவமனைகள் மறுத்துவிட்டதாகக் கூறி, சிறுவனின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம்,திடக்கழிவு மேலாண்மை விதிகளை முறையாக பின்பற்றாததால், சிக்குன் குன்யா, டெங்கு காய்ச்சல் போன்றவை ஏற்படுகின்றன என்று வருத்தம் தெரிவித்தது.

ஆதலால், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 தொடர்பாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனை நடத்தி மாநில அளவில் ஆலோசனை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 3 வாரங்களுக்குள் இந்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

மேலும், அந்த ஆலோசனை வாரியத்தில் எத்தனை உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள், மாநில வாரியாக அவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் 845 பக்க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 22 மாநிலங்களில் இருந்து தான் ஆலோசனை வாரியம் அமைப்பது தொடர்பான அறிக்கை கிடைத்துள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு கடும் கோபமடைந்த நீதிபதிகள், எந்த முழுமையான விவரங்களும் இல்லாத இந்த அறிக்கையை நாங்கள் எப்படி பிரமாணப் பத்திரமாக ஏற்க முடியும். இதை நாங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆவணமாக ஏற்க முடியாது. இதை நீங்கள் படிக்கவில்லையா?. எங்களை இந்த அறிக்கையை படிக்கக்கூறுகிறீர்களா? இந்த நீதிமன்றத்துக்கு மத்திய அரசு என்ன கூற விரும்புகிறது? எங்கள் மனதில் இடம்பிடிக்க, ஈர்ப்பதற்கு ஏதேனும் செய்ய அரசு முயல்கிறதா? நாங்கள் அப்படி எல்லாம் மயங்கிவிடமாட்டோம். நீங்கள் குப்பைகளை கொண்டுவந்து எங்களிடம் கொட்டுகிறீர்கள்; நாங்கள் ஒன்றும் குப்பை பொறுக்குபவர்கள் இல்லை. இந்த பிரமாணப் பத்திரத்தை ஏற்க முடியாது என்று மத்திய அரசை கடுமையாக சாடினர்.
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!