கூட்டணியில் இருந்துகொண்டே கும்மி எடுத்த வானதி சீனிவாசன்!! நொந்துப்போன எடப்பாடி...

By ezhil mozhiFirst Published Mar 18, 2019, 8:30 PM IST
Highlights

இவ்வளவு எதிர்ப்புகளுக்கு இடையிலும் தமிழகத்தில் பி.ஜே.பி.யை உயிர்ப்பிப்போடு வைத்திருப்பதில் மாநில பி.ஜே.பி.யின் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனின்  பங்கும் பெரிது. இவருக்கும், மாநில தலைவர் தமிழிசைக்கும் பெரிதாய் இணக்கமில்லை. 

இவ்வளவு எதிர்ப்புகளுக்கு இடையிலும் தமிழகத்தில் பி.ஜே.பி.யை உயிர்ப்பிப்போடு வைத்திருப்பதில் மாநில பி.ஜே.பி.யின் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனின்  பங்கும் பெரிது. இவருக்கும், மாநில தலைவர் தமிழிசைக்கும் பெரிதாய் இணக்கமில்லை. கொங்குமண்டலத்தை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்கிறார் வானதி. 

ரஃபேல் முதல் புல்வாமா வரை மத்திய அரசின் மீதான எந்த நெருக்கடி விமர்சனங்களுக்கும் பட்படாரென பதில் கூறி சூழலை தங்களுக்கு சாதகமாக ஆக்கிட முயல்வதில் வல்லவர்தான் வானதி. கோயமுத்தூர் தொகுதியின் வேட்பாளராக பெரும் முயற்சியிலிருக்கும் இவர் ‘ஊழல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஏன்?’ என்று வெடித்திருக்கும் விமர்சனங்களுக்கு பொளேர் பதில்கள் கொடுத்திருக்கிறார். பி.ஜே.பி.யை நியாயப்படுத்திட அவர் சொல்லியிருக்கும்  விஷயங்கள், எடப்பாடியாரை அநியாயத்துக்கு வருத்தமிட வைத்துள்ளதாக அ.தி.மு.க.வினர் புலம்பிக் கொட்டுகின்றனர். 

அப்படி என்ன சொல்லியிருக்கிறார் வானதி?

“ஊழலுக்கு எதிரான கட்சிதான் மோடியின் பி.ஜே.பி! என தம்பட்டம் அடிக்கிறீர்கள். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததில் நெருடல் இல்லையா? என கேட்டதற்கு...’அதாவதுங்க, தேர்தல் கூட்டணி அப்படின்னு வர்றப்ப, யார் ஜெயிக்கணும்? யார் கையில் ஆட்சியை கொடுக்கணும்? அப்படிங்கிற கேள்விகள் வருது. ஒவ்வொரு கட்சியும் தன்னோட வெற்றிக்காக பிற கட்சியை, கூட்டணியை விமர்சனம் செய்யுது. இதையெல்லாம் ஒரு புறம் வைத்துவிட்டு தேர்தல் வெற்றியே பிரதான குறிக்கோளாக மாறிவிடுது.’ என்று சொல்லியுள்ளார். 

அதாவது! கூட்டணி சேர்ந்த தர்மத்திற்காக, எடப்பாடியாரின் அரசு நேர்மையானது! என்று சொல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை. ஆனால் அதன் மீதுள்ள கறை நிரூபிக்கப்படாதது! என்று கூட சொல்லி காப்பாற்றிட முயலாமல் ‘தேர்தல் கூட்டணியில் சக கட்சி மீது விமர்சனம் வந்தால் அதை ஒருபக்கம் தூக்கி வைத்துவிட்டு, வெற்றியை பார்க்க வேண்டும்!’ என்று அவர் சொல்லியுள்ளதை அ.தி.மு.க. பேரதிர்ச்சியுடன் பார்க்கிறது. 

அதேபோல் ‘தமிழகத்தில் அ.தி.மு.க.வின் ஆட்சி எப்படி இருக்கிறது?’ எனும் கேள்விக்கு....’நல்ல ஆட்சியை இங்கேயும் அ.தி.மு.க. கொடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.’ என்று சொல்லியுள்ளார் வானதி. இதையும் மேற்கோள்காட்டி புலம்பும் அ.தி.மு.க.வினர்...’அ.தி.மு.க. ஆட்சி மக்கள் நலனுக்காக சிறப்பாக பாடுபடுகிறது! என்றெல்லாம் சர்டிஃபிகேட் கொடுக்காவிட்டாலும் கூட பரவாயில்லை, ‘சீராக செல்கிறது’ என்று பொத்தாம் பொதுவாய் கூறியிருக்கலாம். 

ஆனால் அப்படியில்லாமல், ‘நாங்கள் மத்தியில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் கூட்டணியில் இணைந்த பின்னாவது இனி தமிழகத்தில் எடப்பாடியார் நல்ல ஆட்சியை கொடுக்குமுன்னு நம்புறோம்! எங்களை பார்த்தாச்சும் நல்ல ஆட்சி கொடுக்கும் பாடத்தை அவங்க படிச்சுக்கட்டும்.’ எனும் அர்த்தம் தொனிக்க, வானதி பேசியிருக்கிறது கூட்டணி தலைமையை இழிவுபடுத்துற செயல். 

பி.ஜே.பியின் முக்கிய தலைவரிடம் இதை நாங்க எதிர்பார்க்கல. இந்த பதில்களை கவனிக்கும் மக்கள், கூட்டணியிலிருக்கும் பி.ஜே.பி.யே இப்படி பேசுறப்ப, அ.தி.மு.க. ஆட்சி இங்கே நல்லா இல்லைன்னுதானே அர்த்தம், பிறகு எதுக்கு அந்த கூட்டணிக்கு நாம ஓட்டுப்போடணும்? அப்படின்னு நினைச்சால் ஐந்து தொகுதிகளில் பி.ஜே.பி.யும்தான் தோற்கும். வார்த்தைகளில் கவனம் தேவை மேடம்!” என்கிறார்கள். 
ஆனால் இந்த சலசலப்புக்கெல்லாம் வருத்தப்படுபவரா வானதி?

click me!