
குறிப்பிட்ட தேதிகளில்தான் குழந்தை பிறக்க வேண்டுமென முடிவு செய்து அறுவை சிகிச்சை செய்வது கூடாது என்றும், முழுவளர்ச்சி அடைவதற்கு முன்னர் குழந்தைகள் பிறப்பதால் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது, எனவே உங்கள் அண்ணனாக கேட்கிறேன், இது போன்ற செயல்களை கைவிட வேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் அதிரடி மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது கொரோனா காலத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
தேர்தலில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டையில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பங்கேற்றனர். அதில் சுமார் 100 பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கர்ப்பிணி பெண்களுக்கு சேலை, வளையல், சீர்வரிசை பொருட்களை அமைச்சர்கள் வழங்கினர். அப்போது தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர் கீதாஜீவன் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் போட்டு சிறப்பித்தார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், கர்ப்பிணியாக உள்ள பெண்கள், இந்த நேரத்தில் தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்து அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பிரசவித்துக்கொள்ளவது தவறு, விரும்புபவரின் பிறந்த தேதி, வழிபடும் தெய்வம், மூதாதையர் நினைவாக நினைத்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தவறான மனநிலைக்கு பலரும் சென்று விட்டார்கள். குழந்தைகள் முழுவளர்ச்சி பெறுவதற்கு முன்னர் குழந்தை பெற்றுக் கொண்டால் குழந்தைகளுக்கு உறுதியாக குறைபாடு ஏற்படும், குழந்தையின் வளர்ச்சியை கெடுத்தால், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, திடகாத்திரமான குழந்தையாக இருக்காது. இயற்கையாக சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்கும் வகையில் நீங்கள் இருக்க வேண்டும் என உங்கள் அண்ணனாக நான் கேட்டுக்கொள்கிறேன் என அவர் உருக்கமாக பேசினார். அப்போது அவரது பேச்சைக் கேட்ட அங்கிருந்த பெண்கள் அமைச்சரின் பேச்சை கேட்டு நெகிழ்ச்சியடைந்தனர்.