முப்பெரும் விழாவுக்கு தலைமை... மாறும் காட்சிகள்.. மதிமுகவில் சீனுக்கு வந்த வைகோ மகன்..!

By Asianet TamilFirst Published Sep 23, 2021, 8:58 AM IST
Highlights

மதிமுகவில் கட்சி பதவிக்கு வருவதற்கு நான் தயாராக வேண்டும். முதலில் பக்குவப்பட வேண்டும். சொல்லாற்றல், செயலாற்றலை பெருக்க வேண்டும் என்று வைகோவின் மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார். 
 

அண்மைக் காலமாகவே மதிமுகவில் வைகோவின் மகன் துரை வைகோ முன்னிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. வைகோவுக்கு 77 வயது ஆகிவிட்டதாலும், உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாலும் முன்பு போல் பொது நிகழ்ச்சிகளில் சுறுசுறுப்பான வைகோவை காண முடியவில்லை. எனவே, மதிமுகவில் அவருடைய மகன் பொறுப்புக்கு வர வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் வைகோவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். 
இந்நிலையில் செப்டம்பர் 22 அன்று வைகோவின் பிறந்த நாளையொட்டி பெரியார், அண்ணா, வைகோ ஆகியோரின் பிறந்த நாளை மதிமுகவினர் முப்பெரும் விழாவாக சென்னையில் கொண்டாடினார்கள். இந்த விழாவுக்கு தலைமை தாங்கியதே வைகோவின் மகன் துரை வைகோதான். அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற இந்த விழாவை கேக் கெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த விழாவில் துரை வைகோ பேசும்போது, அவர் கட்சிப் பொறுப்புக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் இருந்தது. அவர் பேசியது இதுதான். “மதிமுக வரலாற்றிலும் வைகோவின் வரலாற்றிலும் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவது இதுதான் முதல் முறை.
நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று எல்லோரும் கூறுகிறார்கள்.  துரை வையாபுரி காலம் முடிந்துவிட்டது. துரை வைகோ காலம் தொடங்கி விட்டது என்று முன்பே நான் சொல்லிவிட்டேன். கட்சி பதவிக்கு வர வேண்டும் என்று பலரும் என்னிடம் கூறுகிறார்கள். அதற்கு நான் தயாராக வேண்டும். முதலில் பக்குவப்பட வேண்டும். சொல்லாற்றல், செயலாற்றலை பெருக்க வேண்டும். தொண்டர்கள் அழைப்பதுபோல மக்களும் நான் பதவிக்கு வரவேண்டும் என்று அழைக்கும்போது நான் கட்சி பதவிக்கு வருவேன். திராவிட இயக்கம் வலுபெறவும், திராவிட இயக்கத்தின் நன்மைக்காகவும் மதிமுக, திமுக இரட்டைக்குழல் துப்பாக்கியாக இணைந்து செயல்பட வேண்டும்.” என்று துரை வைகோ தெரிவித்தார். 

click me!