வளைத்து பிடித்த வருமான வரித்துறை! வசமாக சிக்கிய வைகுண்டராஜன்! கை கழுவிய மாமூல் பார்ட்டிகள்!

By vinoth kumarFirst Published Oct 30, 2018, 9:15 AM IST
Highlights

வருமான வரித்துறை சோதனைக்கு ஆளாகியுள்ள வைகுண்டராஜன் எந்த பக்கத்திலும் தப்பிவிடாதபடி அதிகாரிகளை வளைத்து பிடித்துள்ளனர்.

வருமான வரித்துறை சோதனைக்கு ஆளாகியுள்ள வைகுண்டராஜன் எந்த பக்கத்திலும் தப்பிவிடாதபடி அதிகாரிகளை வளைத்து பிடித்துள்ளனர். கடந்த வியாழனன்று அதிகாலை ஆறு மணிக்கு திடீரென வி.வி.மினரல்ஸ் தொடர்புடைய 100 இடங்களுக்குள் சுமார் 500 வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர். சென்னை எழும்பூரில் உள்ள கமான்டர்ஸ் காலனியில் உள்ள வைகுண்டராஜன் வீட்டிற்குள்ளும் அதே நேரத்தில் ஆறு பேர் சென்றனர். வைகுண்டராஜன் தூங்கிக் கொண்டிருப்பதாக வீட்டில் உள்ளவர்கள் கூறிய நிலையில் எழுப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டு அதிகாரிகள் சோதனையை தொடர்ந்துள்ளனர். 

ஆனால் சில நிமிடங்களிலேயே வைகுண்டராஜன் எழுந்து வந்து அதிகாரிகளிடம் என்ன என்று விவரம் கேட்டுள்ளார். சோதனைக்கு வந்துள்ளதாக கூறி அதற்கான ஆவணங்களை காட்டியுள்ளனர். அப்போது வைகுண்டராஜனுக்கு சுமார் 100 இடங்களில் சோதனை என்கிற தகவல் தெரியவில்லை. மேலும் வைகுண்டராஜனை செல்போன் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். வைகுண்டராஜன் தன்னுடைய வழக்கறிஞரிடம் மட்டும் அதிகாரிகளின் செல்போன் மூலம் பேச அனுமதிக்கப்பட்டார். வீட்டில் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அதிகாரிகள் இருவர் வைகுண்டராஜனை விசாரணைக்கு அழைத்துள்ளனர். 

ஆனால் அதற்கு வைகுண்டராஜன் மறுத்ததாகவும் பின்னர் வழக்கறிஞர் அறிவுறுத்தலை ஏற்று விசாரணைக்கு ஒப்புக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. வீட்டில் உள்ள வைகுண்டராஜன் அலுவலகத்தில் வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர் அதிகாரிகள். 100 இடங்களில் நடைபெறும் சோதனைகளின் தொடர்ச்சியாக கிடைத்த ஆவணங்கள் மற்றும் தகவல்கள் குறித்து வைகுண்டராஜனிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அதிகாரிகள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் வைகுண்டராஜன் சளைக்காமல் பதில் அளித்துள்ளார். ஆனால் விசாரணை மாலை ஆறு மணிக்கு பிறகும் நீடித்ததால் வைகுண்டராஜன் சிறிது டென்சன் ஆகியுள்ளார் .இதனை தொடர்ந்து விசாரணையை வியாழனன்று முடித்துக் கொண்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளனர். 

அப்போது தான் உயர்நீதிமன்றத்தில் வைகுண்டராஜன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வைகுண்டராஜனை சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக வழக்கறிஞர் கூற அதனை வருமான வரித்துறை திட்டவட்டமாக மறுத்தது. நெருங்கிய உறவினர்கள் எப்போது வேண்டுமானாலும் வைகுண்டராஜனை சந்திக்கலாம் என்றும் ஆனால் விசாரணை முடியும் வரை அவரை வீட்டை விட்டு வெளியே அனுமதிக்க முடியாத என்றும் வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்தது. இதனை தொடர்ந்தே வைகுண்டராஜனை அவரது உறவினர்கள் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் கூட விசாரணையின் தீவிரத்தை அதிகாரிகள் குறைக்கவில்லை. சோதனையின் போது சட்டவிரோதமாக தாது மணல் குவாரி செயல்பட்டு வருவதை வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது. இதே போல் வெளிநாடுகளில் மற்றும் கோவை மண்டலத்தில் வி.வி. மினரல்ஸ் செய்துள்ள முதலீடுகள் குறித்த தகவலும் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று நெல்லை மாவட்டம் திசையன் விளைக்கு வைகுண்டராஜனை அழைத்துக் கொண்டு பறந்துள்ளது வருமான வரித்துறை. அப்போது தான் பிரச்சனையின்  தீவிரத்தை வைகுண்டராஜன் தரப்பு உணர்ந்துள்ளது. வழக்கமான சோதனை போல் தெரியவில்லை ஏதோ ஒன்றை எதிர்பார்த்து மத்திய அரசு செயல்படுகிறது என்று அறிந்து கொண்டு மத்தியில் தங்களுக்கு உள்ள தொடர்புகளை வைகுண்டராஜன் தரப்பு தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளது. 

ஆனால் அனைவருமே தற்போதைக்கு எதுவும் உதவ முடியாது என்று ஒரே கோரஸ் பாடியுள்ளனர். இவர்களில் மாதம் மாதம் கோடிகளில் மாமூல் வாங்கும் சிலரும் அடங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டும் இன்றி தமிழகத்தில் உள்ள பா.ஜ.க தலைவர்கள் மட்டும் இல்லாமல் டெல்லியில் உள்ள அரசியல் பிரமுகர்களும் கூட வைகுண்டராஜன் விவகாரத்தில் ஒதுங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் வழக்கம் போல் சமுதாய ரீதியில் அதாவது நாடார் சமுதாயத்திற்கு எதிரான விவகாரமாக வருமான வரித்துறை சோதனையை திசை திருப்ப ஒரு முயற்சி நடைபெற்றது. ஆனால் அண்ணாச்சி அவருக்கு தேவை என்றால் தான் நம்மை அணுகுவார் நாம் ஒரு மாநாடு என்ற சென்றால் 50 ஆயிரம் ரூபாய் டொனேசன் கொடுத்து அவமானப்படுத்துவார் என்று கூறி நாடார் சங்கங்களும் மவுனம் காக்கின்றன.

click me!