வைரமுத்து தனி மனிதரல்ல; தமிழர்களின் சொத்து.. அவரை மிரட்டினால் நடக்குறதே வேற!! வைகோ எச்சரிக்கை

First Published Jan 13, 2018, 11:48 AM IST
Highlights
vaiko supports vairamuthu


வைரமுத்து தனி மனிதரல்ல; அவர் தமிழர்களின் சொத்து. எனவே அவரை மிரட்டலாம் என்றோ அவருக்கு ஊறு விளைவிக்கலாம் என்றோ யாரும் கனவுகூட காண வேண்டாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

ஆண்டாள் குறித்த மேல்நாட்டு அறிஞரின் கருத்தை மேற்கோள் காட்டி வைரமுத்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆலயத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

ஆண்டாள் பக்தர்களும் இந்து மத அமைப்பினரும் வைரமுத்துவிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். இதற்கிடையே இதுதொடர்பாக தனது வருத்தத்தை வைரமுத்து தெரிவித்த நிலையிலும் வைரமுத்துவிற்கு எதிரான கண்டனங்கள் அடங்கவில்லை. அவருக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.

அதேநேரத்தில் வைரமுத்துவிற்கு ஆதரவுக் குரல்களும் ஆங்காங்கே எழுகின்றன. திமுக செயல் தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் வைரமுத்துவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வைரமுத்துவிற்கு ஆதரவாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் உயிரினும் மேலான தமிழ் மொழிக்கு காலத்தால் அழியாத காவியங்களைத் தந்த படைப்பாளி கவிப்பேரரசர் வைரமுத்து. தேனினும் இனிய பாடல்களை கலைத்துறைக்குத் தந்தார். அவர் தீட்டிய கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் புதினங்கள் தமிழ்க்குலத்தின் பண்டைய பண்பாட்டு நெறிமுறைகளையும் இருபதாம் நூற்றாண்டின் தமிழனுடைய வாழ்க்கைப் போராட்டத்தையும் அற்புதமாக சித்தரித்தவையாகும். 

நீண்ட நெடிய தமிழ் இலக்கிய வரலாற்றில் அடுத்த தலைமுறையின் சிந்தனைக்கு கருவூலமாக்கித் தரும் அவரது தமிழ்ப் பணி இன்னும் பல நூறாண்டுகளுக்குப் போற்றப்படும். தென்பாண்டிக் கடல் முத்தாக ஒளிவீசும். வைரமாக தமிழ்த் தாய்க்குக் கிடைத்த ஒப்பற்ற புகழ் அணி தான் வைரமுத்து. அரை நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக செந்தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் அவர் ஆற்றி வருகிற இலக்கிய பணி நன்றிக்குரியது. 

வைரமுத்து தனி மனிதரல்ல; தமிழர்களின் சொத்து. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் போற்றத்தகும் ஆண்டாள் அவர்களையும் அவர் தந்த பாடல்களையும் மிக உன்னதமாகச் சித்தரித்துள்ளார். ‘மணிமுடி வேந்தர்களின் அரணாக வளர்ந்த தமிழையே ஆண்டாள்; தமிழ் மொழியையே ஆட்சி புரிந்தாள்’ என்று தலைப்பிட்டு எழுதினார். விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் கருத்து குறித்து அச்செந்தமிழ்க் கவிஞன் வருத்தம் தெரிவித்துள்ளார். 

தென்பாண்டி மண்டலத்தின் தீரமிகு கவிஞரை மிரட்டலாம் என்றோ அவருக்கு ஊறு விளைவிக்கலாம் என்றோ எவரும் கனவுகூட காண வேண்டாம் என வைகோ எச்சரித்துள்ளார்.
 

click me!