முன்னாள் முதல்வரை கண்டுபிடிக்கக் கோரி வைகோவின் ‘ஹேபியஸ் கார்பஸ்’ மனு... அரசியல் வரலாற்றில் அரிதான நிகழ்வு!

By Asianet TamilFirst Published Sep 12, 2019, 7:21 AM IST
Highlights

வைகோவின் மனு என்ன தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது, இந்த மனு விசாரணைக்கு வரும்போது தெரிந்துவிடும். எப்படி இருந்தாலும் ஒரு முன்னாள் முதல்வரை, முன்னாள் மத்திய அமைச்சரை, அரசியல் கட்சியின் தலைவரை ஆஜர்படுத்த வேண்டும் என்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது இந்திய அரசியல் இதற்கு முன்பு கண்டதாக பதிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை.
 

ஒரு முன்னாள் முதல்வரைக் கண்டுபிடித்து தர வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு அரசியல் அரங்கில் அரிதாகவே பார்க்கப்படுகிறது.
தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜப்படுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் ‘ஹேபியஸ் கார்பஸ்’ என்றழைக்கப்படும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது அகில இந்திய செய்தியானது. வழக்கமாக காணாமல் போனவர்கள், கடத்தப்படுபவர்கள், காதல் திருமணம் செய்து தலைமறைவாவோர், சட்டத்துக்கு புறம்பாக அடைத்து வைக்கப்படுபவர்கள் ஆகியோரை மீட்டுத் தர வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வது வழக்கம்.
ஆனால், அரசியல் வரலாற்றில் ஓர் அரசியல்வாதியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று இன்னொரு அரசியல்வாதி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருப்பது இதுவே முதல் நிகழ்வாக இருக்கும் என்று கருத வேண்டியிருக்கிறது. ஏனென்றால், பொது வாழ்க்கையில் ஈடுபடும் அரசியல்வாதிகளைக் கண்டுபிடித்து தர வேண்டிய சூழல் எக்காலத்திலும் பொதுவாக ஏற்பட்டதில்லை. மக்களோடு எப்போதும் பயணிப்பவர்களாக அரசியல்வாதிகள் இருப்பதால், அந்த நிலையும் வந்திருக்காது.
பரூக் அப்துல்லா முன்னாள் முதல்வராக மட்டுமல்ல, மத்திய அமைச்சராகவும் இருந்தவர். அந்த வகையில் அவரை ஆட்கொணர்வு மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரியிருப்பது புதுமையான செயலாகப் பார்க்க முடிகிறது. தன் கட்சி மாநாட்டில் பங்கேற்க ஒப்புக்கொண்டிருந்த பரூக் அப்துல்லாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று மனுவில் வைகோ தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, பரூக் அப்துல்லா சார்ந்த விஷயங்கள் மட்டும் அல்லாமல், காஷ்மீர் நிலவரம் குறித்தும் பேசப்படும் நிலையும் நீதிமன்றத்தில் ஏற்படலாம்.
வைகோவின் மனு என்ன தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது, இந்த மனு விசாரணைக்கு வரும்போது தெரிந்துவிடும். எப்படி இருந்தாலும் ஒரு முன்னாள் முதல்வரை, முன்னாள் மத்திய அமைச்சரை, அரசியல் கட்சியின் தலைவரை ஆஜர்படுத்த வேண்டும் என்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது இந்திய அரசியல் இதற்கு முன்பு கண்டதாக பதிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை.
 

click me!