1500 பேருக்கு மட்டுமே பலன் கிடைக்கும்... அனைவருக்கும் கிடைக்க தமிழக அரசின் நடவடிக்கை தேவை... வைகோ!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 3, 2021, 12:35 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கீகரிப்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த அடையாள அட்டை வைத்திருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா நிவாரணம் வழங்க வேண்டுமென ​ தமிழக அரசுக்கு அடுத்தடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கொரோனா பெருந்தோற்று காலத்தில் களத்தில் இறங்கி பணியாற்றும் ஊடகவியலாளர்களை முன் களப்பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தோடு  ஊடகவியலாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.5 ஆயிரமும், கொரோனா தொற்றால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசாணை அங்கீகரிப்பட்ட அடையாள அட்டை உள்ள  ஊடகவியாளர்களுக்கு மட்டுமே என்பது பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கீகரிப்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த அடையாள அட்டை வைத்திருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா நிவாரணம் வழங்க வேண்டுமென​ தமிழக அரசுக்கு அடுத்தடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடகங்களின் செய்தியாளர்களை, கொரோனா எதிர்ப்புப் போரின் முன்களப் பணியாளர்களாக அறிவித்து, உடனடி உதவித்தொகையாக ரூ 5000; கொரோனா தாக்கி உயிர் இழந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ 5 இலட்சத்தில் இருந்து 10 இலட்சமாக உயர்த்தியும் ஆணை பிறப்பித்த, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு, செய்தியாளர்கள் நெஞ்சார்ந்த நன்றியும், பாராட்டுகளும் தெரிவித்து வரவேற்று இருக்கின்றார்கள். 

ஆனால், தமிழ்நாடு முழுமையும் சேர்த்து, அரசு அடையாள அட்டை பெற்று இருக்கின்ற சுமார் 1500 பேர்கள் மட்டுமே இந்த வளையத்திற்குள் வருகின்றார்கள். முறையாக விண்ணப்பித்த பலருக்கு,  அடையாள அட்டை கிடைக்கவில்லை. எத்தனையோ பேர் தகுதி இருந்தும் விண்ணப்பிக்காமல் இருக்கின்றார்கள். 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகங்களில் பணிபுரிந்து வருகின்ற பல செய்தியாளர்கள், கேமராமேன்கள், படக்கலைஞர்கள், செய்தி வாசிப்பாளர்களுக்கும்கூட, அரசு அடையாள அட்டை கிடைக்கவில்லை. எனவே, அரசு ஏற்பு அளித்து இருக்கின்ற செய்தித்தாள்கள், தொலைக்காட்சி நிறுவனங்களின் அடையாள அட்டை பெற்று இருக்கின்ற துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள், படக்கலைஞர்கள் அனைவருக்கும், அரசு உதவித் தொகை கிடைத்திட ஆவன செய்திட வேண்டும் என, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். 
 

click me!