
நான் அரசியல்வாதி இல்லை விவசாயி….டெல்லி ஜந்தர் மந்தரில் கர்ஜித்த வைகோ...
டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தொடர்ந்து 14-வது நாளாக தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நான் அரசியல்வாதி இல்லை விவசாயி என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
வறட்சியில் வாடும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி தமிழகத்தை சேர்ந்த 'தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்' என்ற அமைப்பின் சார்பில் தமிழக விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 13-ம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் சமூகநல அமைப்பினர் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தின் 14-ம் நாளான இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
தமிழக அரசு நிவாரண நிதி தொடர்பாக தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வந்தாலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிகத்து வருவதாக தெரிவித்தார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் கோடிக்கணக்கான விவசாயிகளின் பிரதிநிதிகளாகத்தான் இந்த 300 பேர் இங்கே இருக்கிறார்கள் இங்கே நான் ஒரு அரசியல்வாதியாக இங்கு வரவில்லை, ஒரு விவசாயியாகவே வந்திருக்கிறேன் என்றார்.
தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து கொடுக்க உள்ளேன் என்று தெரிவித்த வைகோ, அதற்கும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் இந்தப் போராட்டத்தை நான் பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பேன் என வைகோ தெரிவித்தார்.