ஸ்டாலினுக்கு வைத்தியரானார் வைகோ: ஏர்போர்ட்டில் நடந்த எக்கச்சக்க ட்ரீட்மெண்ட்...

 
Published : Dec 01, 2017, 09:35 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
ஸ்டாலினுக்கு வைத்தியரானார் வைகோ: ஏர்போர்ட்டில் நடந்த எக்கச்சக்க ட்ரீட்மெண்ட்...

சுருக்கம்

Vaiko meet Stalin at covai airport

தி.மு.க.விலிருந்து வைகோ வெளியேற காரணமே ஸ்டாலினுக்கு அக்கட்சியில் தரப்பட்ட முக்கியத்துவம்தான்! என்பது வரலாறு சொல்லும் சேதி. தனக்கு அடுத்து வை.கோபால்சாமிக்கு பெரும் ஆதரவு பெருகி நிற்பதால் பிற்காலத்தில் தன் மகன் ஸ்டாலினுக்கு இடைஞ்சலாக அவர் வந்துவிடக்கூடும் எனும் பயத்தில் கருணாநிதியே சிக்கல்களை உருவாக்கி வைகோ வெளியேறும் சூழலை  ஏற்படுத்தினார் என்பார்கள். 

தி.மு.க.விலிருந்து வீராவேசமாய் வெளியேறி ம.தி.மு.க.வை துவக்கி தனித்து போட்டியிட்டு துவண்ட வைகோ பின் அந்த தி.மு.க.விடமே கூட்டணிக்கு போய் நின்றதுதான் காலம் செய்த கோலம்! அதன் பிறகும் பிளவு! பின் மீண்டும் கூட்டணி முயற்சி என்று போய்க்கொண்டிருந்தது நிலை.

இந்த சூழலில் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.வுக்கு எதிராக கடுமையாய் அரசியல் செய்தார் வைகோ. தான் கடும் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை, தி.மு.க. படுதோல்வி அடைய வேண்டும் என்று நினைத்தார். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. விஸ்வரூப வெற்றி பெற்றதன் மூலம் அவரது எண்ணம் பலித்தது. சட்டமன்ற தேர்தல் வைபரேஷன் துவங்கியதும் கருணாநிதி மற்றும் ஸ்டாலினுக்கு எதிரான வைகோவின் சாடல்கள் எல்லைதாண்டி எகிறி குதித்ததாக விமர்சகர்கள் கோடிட்டு காட்டினர்.

கருணாநிதி பற்றிய தன் விமர்சனத்துக்கு தானே வருந்துமளவுக்கு பேசிவிட்டார் வைகோ. கூடவே சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வைகோவை அப்செட்டாக்கின. தி.மு.க. ஆட்சியை பிடிக்கவில்லைதான் ஆனால் அதிகப்படியான சீட்களை கொண்ட எதிர்கட்சி எனும் ரெக்கார்டை படைத்தது. இது வைகோவை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. வைகோ இவ்வளவு துள்ளினாலும் கூட அவரை பற்றி பேசுவதை தவிர்ப்பதும், விமர்சிப்பதை தவிர்ப்பதுமே ம.தி.மு.க.வுக்கு தாங்கள் கொடுக்கும் சாட்டையடி! என நினைத்தது தி.மு.க.  ‘நானெல்லாம் பேசுமளவுக்கு நீங்கள் ஒரு கட்சியே இல்லை’என்று வைகோவுக்கு உணர்த்துவதையே ஒரு குறியாக வைத்திருந்தார் ஸ்டாலின். 

சட்டமன்ற தேர்தலுக்கு பின் இரண்டு கட்சிகளும் தங்கள் போக்கில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் கோபாலபுரம் சென்று சுகவீனப்பட்டு இருந்த கருணாநிதியை சந்தித்தார் வைகோ. ‘அண்ணன் அடிக்கடி என் கனவில் வந்தார். அதனால் அவரை காண வந்தேன்.’ என்று எந்த விமர்சனம் பற்றியும் கவலையில்லாமல் விசிட்டுக்கு விளக்கம் கொடுத்தார். 

அரசியலில் முறைத்து நின்ற வைகோவும், ஸ்டாலினும் கோபாலபுர இல்லத்தினுள் இணைந்து நின்றனர். அதன் பின் முரசொலி பவளவிழா பொதுக்கூட்டத்தில் வைகோவுக்கு சிறப்பு செய்தது தி.மு.க. 
இதன் பின் மோடியின் கோபாலபுர விசிட் வைகோவுக்கும், தி.மு.க.வுக்கும் இடையில் மீண்டும் ஒரு இடைவெளியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று வைகோ, ஸ்டாலின் இருவரும் யதேச்சையாக ஒரே விஷயத்தை நோக்கி கோயமுத்தூர் சென்றிருந்தனர். 

விமான நிலைய லாபியில் ஸ்டாலினும், வைகோவும் சந்தித்துக் கொண்டனர். ரிலாக்ஸ்டாக ஸ்டாலின் அமர்ந்திருக்க, அவரை உற்றுப் பார்த்தபடி வைகோ சில விஷயங்களை சீரியஸாக பகிர்ந்திருக்கிறார். இவர்களை சுற்றி ஆனால் நன்றாக தள்ளி தி.மு.க.வின் ஆ.ராசா, குன்னூர் முபாரக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நின்று கவனித்திருக்கிறார்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரபரப்பு துவங்கிவிட்ட நிலையில் இந்த சந்திப்பு தமிழக அரசியலில் ஒரு அதிர்வை துவக்கியுள்ளது. ஆனால் வைகோவோ ‘இடைத்தேர்தல் தொடர்பாக ஸ்டாலினுடன் எதுவும் பேசவில்லை. அரசியல் நாகரிகமாக சந்தித்துப் பேசுவதில் தவறில்லை.’ என்று சொல்லியிருக்கிறார். 
தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. தலைகளோ ”அண்ணன் ஸ்டாலினுக்கு உடல் நிலை சரியில்லையல்லவா! அதைத்தான் அண்ணன் வைகோ விசாரித்தார். தொண்டை கட்டினால் எந்த மாதிரியான நாட்டு வைத்தியம் எடுத்துக் கொள்ள வேண்டும், அதிகப்படியாக ஆங்கில மருந்தை எடுக்க வேண்டாம்!

கைவைத்தியத்திலேயே இந்த மாதிரியான விஷயங்களை சரி செய்துவிடலாம். என்று அக்கறையாக சொல்லி, தொண்டை வலிக்கு சிகிச்சையாக தென்மாவட்டத்தில் பொதுவாக புழக்கத்திலிருக்கும் நாட்டு மருந்துக்களையும் சிபாரிசு செய்தார்.” என்கிறார்கள். 

ஆக மொத்தத்தில் ஸ்டாலினுக்கு மருத்துவராகிவிட்டார் வைகோ.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு