
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில்போட்டியிட, அ.தி.மு.க., -தி.மு.க., வேட்பாளர்கள் மற்றும் , சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் டி.டி.வி., தினகரன் ஆகியோர், இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்தார். இதையடுத்து அவரது தொகுதியான ஆர்.கே.நகரில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக சார்பில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட சில கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரையடுத்த அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இபிஎஸ் – ஒபிஎஸ் அணிகள் இணைந்து தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்து இரட்டை இலை சின்னத்தை பெற்றனர். இந்நிலையில் ஆர்.கே.நகருக்கு வரும் 21 ஆம் தேதி தேர்த்ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
திமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட மருது கணேசும், அதிமுக சார்பில் மதுசூதனன் மற்றும் டி.டி.வி.தினகரன் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
இந்த தொகுதியில், நவம்பர் 27ல், வேட்புமனு தாக்கல் துவங்கியது. டிசம்பர் 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு, கடைசி நாள். நாளை மற்றும் நாளை மறுதினம் அரசு விடுமுறை என்பதால், வேட்பு மனு தாக்கல் கிடையாது. எனவே, இன்று ஏராளமானோர் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி தி.மு.க., வேட்பாளர், மருதுகணேஷ்,இன்று பகல், 12:00 மணிக்கும், சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கும் தினகரன், பகல், 12:30 மணிக்கும், அ.தி.மு.க., வேட்பாளர், மதுசூதனன், பகல், 1:00 மணிக்கும், வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்..