தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை திறக்க விடமாட்டேன்.. சுப்ரீம் கோர்ட்டில் பார்த்துக்குறேன்! களத்தில் குதித்த வைகோ

By karthikeyan VFirst Published May 11, 2020, 10:14 PM IST
Highlights

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் இட்ட உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், வைகோ கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். 

கொரோனா  ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்ததையடுத்து, தமிழ்நாட்டில் கடந்த 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 40 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதையடுத்து, மதுப்பிரியர்கள், மது வாங்கும் ஆர்வத்தில், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் நெருக்கமாக நின்று மது வாங்கினர்.

தனிமனித இடைவெளியை பின்பற்றாததற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக்கோரி வழக்குகள் தொடரப்பட்டன. அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை. எனவே கொரோனா மேலும் வேகமாக பரவும் அபாயம் உள்ளதால், டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உத்தரவிட்டது. அதனால் 9ம் தேதியிலிருந்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. 

இதையடுத்து, டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் இட்ட உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மேல்முறையீட்டு மனுவில், டாஸ்மாக் கடைகளை மூடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் முதல் நாள் கூட்டம் அதிகமாக இருந்ததே தவிர, இரண்டாம் நாள் கூட்டம் கட்டுக்குள் வந்தது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட தேவையில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இன்று விசாரணைக்கு வந்திருக்க வேண்டிய அந்த வழக்கை, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் பிழை இருப்பதால் அதை சரிசெய்யக்கூறி தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம். அந்த பிழையை உடனடியாக தமிழக அரசு தரப்பில் திருத்தப்பட்டது. இதையடுத்து வழக்கை நாளை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் நாளை பட்டியலிடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் வழக்கு விசாரணை வேறொரு நாள் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும்போது, தங்கள் தரப்பையும் விசாரிக்கக்கோரி டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சார்பிலும் தமிழ்நாட்டின் எம்பி என்கிற முறையில் வைகோவும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கமும் வைகோவும் டாஸ்மாக் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் பங்குபெறாத போதிலும் இவர்களது கேவியட் மனுவை  வழக்கறிஞர்களின் நீண்ட விவாதத்திற்குப் பின் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்  உச்சநீதிமன்ற பதிவாளர்.

click me!