1 கோடி மக்களுக்கு ரூ1.5 லட்சம் கிடைக்காமல் போனதை பற்றி கேள்வி எழுப்பாதது ஏன்? ப.சிதம்பரத்திற்கு பகீர் கேள்வி

By Thiraviaraj RMFirst Published May 11, 2020, 7:04 PM IST
Highlights

1 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.1.5 கொடுக்க வேண்டிய பணத்தை கார்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறது மத்திய அரசு. இதைப்பற்றியெல்லாம் ப.சிதம்பரம் ஏன் வாய் திறப்பதே இல்லை என வருமான வரித்துறை ஓய்வு பெற்ற அதிகாரி பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.  

1 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.1.5 கொடுக்க வேண்டிய பணத்தை கார்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறது மத்திய அரசு. இதைப்பற்றியெல்லாம் ப.சிதம்பரம் ஏன் வாய் திறப்பதே இல்லை என வருமான வரித்துறை ஓய்வு பெற்ற அதிகாரி பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.  

இதுகுறித்து அவர், ‘’ப.சிதம்பரம் பொருளாதார நிபுணர் என்றாலும் அவர் டாக்டர் மன்மோகன்சிங் அல்ல. ஆனால், இருவருமே பொருளாதார நிபுணர்கள் தான், ஆனால் டாக்டர் மன்மோகன்சிங் மீது இருக்கும் நம்பகத்தன்மை ப.சிதம்பரம் மீது ஏன் வரவில்லை என்றால் அவர் எழுப்ப வேண்டிய சில கேள்விகளை கேட்பதில்லை. 

சில கேள்விகளை எழுப்பாமல் விட்டு விடுகிறார். அவரது வசதிக்கு ஏற்ற கேள்விகளை மட்டுமே எழுப்புகிறார். அதில் முக்கியமானது என்னவென்றால் மத்திய அரசு 14 லட்சம் கோடி கடனாக பெற உள்ளதாக தெரிவித்துள்ளது. இதை வரவேற்று ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார் ப.சிதம்பரம். ’நானும் கடன் வாங்கினால் தான் சமாளிக்க முடியும்’ என்று சொன்னேன் என அவர் அதை வரவேற்கிறார். நெருக்கடியில் இருக்கும்போது கடன் வாங்கி சமாளிக்க வேண்டும் எனக்கூற ஒரு பொருளாதார நிபுணர் எதற்கு? கடன் வாங்காமல் வருவாயை பெருக்குவது எப்படி? இருப்பதை வைத்து சமாளிப்பது எப்படி எனக் கூறுவதுதான் ஒரு பொருளாதார நிபுணருக்கு அழகு.

அதற்கான வழிகளை அவர் சொல்லவில்லை. கடந்த ஆண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதம் குறைத்தார்கள். இதனால் அரசாங்கத்திற்கு ஒவ்வொருவருடமும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு. ஒன்றரை இலட்சம் கோடி இழப்பீடு ஏற்படுவதற்கு பதிலாக அரசாங்கம் அதை வாங்கிக்கொண்டு ஒவ்வொருத்தருக்கும் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கலாம். ஒரு கோடி பேருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கலாம் இந்த அரசாங்கம்.

அந்தப்பணம் மக்களுக்கு எவ்வளவு உதவிகரமாக இருக்கும்? ஆனால், இவர்கள் என்ன சொன்னார்கள் என்றால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் இழப்பாக வருகிறது. அதை இழப்பீடாக பார்க்கக்கூடாது. அந்த நிறுவனங்கள் திரும்பவும் வரும். முதலீடு செய்யும். அதனால் வேலைவாய்ப்புகள் பெருகும் என்று தான் சொன்னார்கள். இதெல்லாம் நடக்கக் கூடிய விஷயமா? நேரடியாக மக்களிடம் கொடுத்தால் அவர்கள் வாழ்வாதாரத்தை கொள்ள போகிறார்கள். ஆகையால் அந்த கார்ப்பரேட் வரி குறித்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என ஏன் அவர் சொல்லவில்லை.

நிறுவன வரியை திரும்பப் பெற வேண்டும் என அவர் ஏன் கேள்வி எழுப்பவில்லை? இரண்டாவது கேள்வி பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, கல்யாண மண்டபங்கள் போன்றவை அறக்கட்டளை மூலமாக செயல்படுகின்றன. அந்த அறக்கட்டளை மூலம் வரும் வருமானத்திற்காக அவர்கள் வரியே கட்டுவதில்லை. அவர்களுக்கு வரக்கூடிய லாபத்தில் பத்து மடங்கு அல்லது 15 மடங்கு வரியாகச் செலுத்தி விட்டு அவர்கள் அந்த வருமானத்தை எடுத்துக் கொள்ளலாமே. அதை ஏன் செய்யக்கூடாது? இதை எதிர்த்து ஏன் ப.சிதம்பரம் கேள்வி கேட்கவில்லை.

 

மூன்றாவது பினாமி சொத்து சேர்த்து வைப்பது. பினாமிகள் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் புழங்குகிறது. அதற்கு எதிராக சிதம்பரம் கேள்வி எழுப்பவில்லை. நான்காவது மிக முக்கியமான கேள்வி பாதுகாப்பு துறை சம்பந்தமானது. ராணுவ வீரர்களுக்கு எவ்வளவு செலவு செய்தாலும் ஏற்றுக்கொள்ளலாம். அதனை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை. அது வேண்டியதுதான். ஆனால், ஆயுத கொள்முதல் செய்வதற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். சமீபத்தில் ட்ரம்ப் இந்தியா வரும்போது இரு 22,000 கோடி ரூபாய் செலவில் ஆயுதம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இத்தனை ஆயிரம் கோடிகள் செலவு செய்து ஆயுதங்களை வாங்க வேண்டுமா?

அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை ஒத்தி வைக்க முடியாதா? இதெல்லாம் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அளவிலான செலவு. அதை எதிர்த்து ஏன் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பவில்லை. இதைப்பற்றி எல்லாம் வாய் திறக்காமல் ’நான் சொன்னது போலத்தான் அரசாங்கம் கடன் வாங்குகிறது’ என்கிறார் ப.சிதம்பரம். இந்த நான்கு கேள்விகளுக்கும் அவர் என்ன பதில் வைத்திருக்கிறார். இறுதியாக அரசாங்கத்திற்கு ஒரு கேள்வி. நீங்கள் 14 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குகிறீர்கள். அந்த கடன் சுமை அனைத்தும் மக்கள் மீது தான் சுமத்தப்படும். இப்போது பொதுமக்கள் சார்பாக கேட்கப்படும் கேள்வி என்னவென்றால் மக்கள் கடன் வாங்கினால் நீங்கள் எப்போது திருப்பித் தருவீர்கள் என்று வங்கிகள் கேட்கின்றன.

திருப்பி செலுத்தும் வசதிகள் இருக்கின்றனவா? என்று ஆராய்ச்சி செய்கின்றனர். அதே கேள்வியை இப்போது அரசாங்கத்திற்கு கேட்கிறோம். 14 லட்சம் கோடி ரூபாய் கடனாக வாங்குகிறீர்கள்? அதனை எப்படி செலுத்துவீர்கள்? ஒரு வருடம் அடுத்து இரண்டு வருடம் கழித்து திருப்பித் தருவதாக இருந்தால் உங்களுக்கு எப்படி இந்த 14 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும்..? மக்கள் மீது வரியை கூட்டி அந்த வகையில்தான் வருவாயை பெருக்குவீர்கள். இதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது. ஆனால் அரசாங்கம் வாய் திறக்காது. எதிர்கட்சி பொருளாதார நிபுணர்களும் வாய் திறக்க மாட்டார்கள். காரணம்  இன்றைய எதிர்கட்சி, நாளை ஆட்சிக்கு வரும்போது இதைத் தானே செய்யப்போகிறது..!

click me!