டாஸ்மாக் கடையை மூட சொல்றவங்கலாம் நைட் கிளப்பில் ஃபுல்லா குடிக்கிறவங்க.. எதிர்க்கட்சிகளை விளாசிய புகழேந்தி

By karthikeyan VFirst Published May 11, 2020, 8:45 PM IST
Highlights

தமிழகத்தில் மதுபான ஆலைகள் வைத்து நடத்துபவர்கள் எல்லாம் டாஸ்மாக் கடைகளை மூட சொல்லுவது நகைப்புக்குரியதாக உள்ளதாக அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். 
 

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அனுமதியின் பேரில் தமிழகத்தில் கடந்த 7ம் தேதி சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 

டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டதிலிருந்தே திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. பெண்களும் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிராகவே இருந்தனர். டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் தனிமனித இடைவெளி உறுதி செய்யப்படும், மொத்த விற்பனை செய்யப்படமாட்டாது என தமிழக அரசு உறுதியளித்ததை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம், நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதித்தது. 

ஆனால் டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என்பதற்கான புகைப்பட, வீடியோ ஆதாரங்களுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என்பது உறுதியானதால் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே, மதுக்கடைகளை தமிழக அரசு இனியும் திறந்தே தீருவேன் என அடம்பிடித்து திறந்தால், அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என எச்சரித்தார். 

திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடியுள்ளார் அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி. இதுகுறித்து பேசியுள்ள புகழேந்தி, கர்நாடகாவிலும் மதுக்கடைகள் நீண்ட நாளுக்கு பிறகு திறக்கப்பட்டதால் முதல் நாளில் கூட்டம் அலைமோதியது. அதேபோலத்தான் தமிழகத்திலும் முதல் நாள் கூட்டம் அதிகமாக இருந்திருக்கும். ஆனால் அதையும் எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக திருப்பிவிட்டன. மது ஆலை நடத்துபவர்களும் மதுக்கடைகள் சார்ந்த மற்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களும் மது விற்பனையை தடை செய்ய வேண்டும் என போலியாக குரல் கொடுப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. 

திமுகவை சேர்ந்தவர்களும், டிடிவி தினகரன் கட்சியை சேர்ந்தவர்களும் மது ஆலை நடத்தி பணம் கொழிப்பது ஊருக்கே தெரியும். மது ஆலைகளை நடத்திக்கொண்டு மது விற்பனையை தடை செய்யக்கோருவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தனது ஆரம்பகால பேட்டிகளில் தான் மது குடிப்பவன் என்று சொல்லியிருக்கிறார். அதேபோல,  மதுவுக்கு எதிராக பேசும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நிர்வாகிகளும் இரவில் கிளப்களிலும் ஓட்டல்களிலும் மது குடிப்பவர்கள் என்பது அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தெரியும். இவர்களெல்லாம் மதுவின் கொடுமைகளை பற்றி பேசுவதை கேட்டால் சிரிப்புதான் வருகிறது.

கொரோனா நிவாரணப்பணிகள் காரணமாகவும் ஊரடங்காலும் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மதுக்கடைகளை திறப்பதா வேண்டாமா என்பது அரசின் கொள்கை முடிவு. எனவே அதைப்பற்றி பேச இவர்களுக்கு தகுதியில்லை என்று புகழேந்தி கடுமையாக விளாசியுள்ளார். 
 

click me!