இனியும் ஆளுநர் பதவியில் பன்வாரிலால் நீடிப்பது மானக்கேடு!! உடனடியாக பதவி விலல வேண்டும்.. வைகோ வலியுறுத்தல்

Asianet News Tamil  
Published : Apr 20, 2018, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
இனியும் ஆளுநர் பதவியில் பன்வாரிலால் நீடிப்பது மானக்கேடு!! உடனடியாக பதவி விலல வேண்டும்.. வைகோ வலியுறுத்தல்

சுருக்கம்

vaiko emphasis governor to resign

தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதோடு, பல்வேறு புகார்களுக்கு ஆளாகியுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இனியும் பதவியில் நீடிப்பது மானக்கேடு. எனவே ஆளுநர் பதவி விலக வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவி ஏற்ற ஆறு மாதங்களில் பல்வேறு சர்ச்சைகளின் நாயகராகக் காட்சி தருகின்றார். ஆளுநருக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை, வானளாவ அதிகாரமாக எடுத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகின்றார்.

‘தமிழ்நாடு அரசின் மற்றொரு தலைமைச் செயலகமாக ராஜ்பவன் செயல்படுகின்றது’ என்று ஏற்கெனவே நான் சுட்டிக்காட்டி இருக்கின்றேன்.

தமிழக அரசுப் பணிகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு செய்தல், அரசு உயர் அதிகாரிகளுக்கு நேரடி உத்தரவு போடுதல், தொழில் தொடங்குவற்கு ராஜ்பவனை நாடுங்கள்; நான் ஏற்பாடு செய்வேன் என்று அறிவித்தல் போன்றவை, ஆளுநரின் வரம்பு மீறிய செயல்கள் ஆகும்.

வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை, அதிலும் குறிப்பாக ஆர்எஸஎஸ் இந்துத்துவா அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டோரைத் தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக நியமித்து வருகின்றார். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசின் முதல்வரைவிட தாம் ஒரு ‘சூப்பர் முதல்வர்’ என்பது போன்று ஆளுநர் தம்மைக் காட்டிக்கொண்டு வருவது கடுமையான கண்டனத்திற்கு உரியது.

தற்போது அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற உரையாடல் அம்பலமாகி, கல்வித்துறை தாழ்ந்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.

புனிதம் நிறைந்த ஆசிரியர் பணிக்குத் தீராத களங்கத்தை, நிர்மலாதேவி போன்றவர்கள் ஏற்படுத்தி உள்ளது அருவருக்கத்தக்கது. கல்விப் பயிர் செழிக்க வேண்டிய சோலையில் இதுபோன்று வளரும் நச்சுச் செடிகளை வேரோடு கிள்ளி எறிய வேண்டும்.

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக ஆளுநர் மீது சந்தேகத்தின் நிழல் படிந்துள்ள நிலையில், அவசர அவசரமாக ஆளுநர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டிய தேவை என்ன?

அங்கே அவர் நடந்துகொண்ட முறையை பெண் செய்தியாளர் ஒருவர் கண்டனம் செய்து இருக்கின்றார். ஏற்கெனவே தஞ்சையில் நடந்த ஒரு விழாவில் ஆளுநர் பங்கேற்றபோதும் இதுபோன்று நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னாள் ஐஏஸ் அதிகாரி சந்தானத்தை, ஒரு நபர் விசாரணை ஆணையமாக ஆளுநர் நியமித்தது சட்டமீறல்; அதற்கான அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது. அவரே புகார் வளையத்திற்குள் சிக்கி இருக்கும்போது, அவர் ஒரு நபர் விசாரணை ஆணையத்தால் எந்த உண்மையும் வெளிவராது.

உண்மையான குற்றவாளிகள் தப்பிக்கவே இந்த ஏற்பாடு.எனவே, இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தலையிட வேண்டும்; நேர்மையான விசாரணை நடத்தி, யாருக்காக அவர் இவ்வாறு செயல்பட்டார் என்ற உண்மையை வெளிக் கொணர வேண்டும்; அந்த நபர்களைக் கைது செய்து குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும்.

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசாங்கத்தை மதிக்காமலும், தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்ற, பல்வேறு புகார்களுக்கு ஆளாகி இருக்கின்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அப்பொறுப்பில் நீடிப்பது மானக்கேடு. அவர் உடனே பதவியில் இருந்து விலக வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

ஓபன் சேலஞ்ஜ்-க்கு தயார்..! என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்..!
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!