வைகோ, திருமாவை கழற்றிவிடும் திமுக…. அரவணைக்க காத்திருக்கும் தினகரன் !!

By Selvanayagam PFirst Published Feb 2, 2019, 8:18 PM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தங்களுக்கு தலா இரண்டு  தொகுதிகள் வேண்டும் என கேட்டு காத்திருக்க, ஒரு தொகுதிதான் தர முடியும், அதுவும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என திமுக தரப்பு கறாராக சொல்லி வருகிறது. இதையடுத்து அவர்கள் இருவரும் கூட்டணியில் இருந்து வெளியேறுவார்கள் என கூறப்படுகிறது.

மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க தமிழகத்தில் திமுக, அதிமுக மற்றும் அமமுக கட்சிகள் தற்போதே தயாராகி வருகின்றன.. திமுகவைப் பொறுத்தவரை காங்கிரசுடன் கூட்டணி என அறிவித்துவிட்டது. ஆனால் வேறு எந்தெந்த கட்சிகள் திமுகவுடன் கூட்டணியில் சேரப் போகிறது என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.

மதிமுக, இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெறலாம் என பேச்சு அடிபடுகிறது. அதே நேரத்தில் திமுக பொருளாளர் துரை முருகன் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என பெரும் முயற்சி செய்து வருகிறார். அப்படி ஒரு வேளை பாமக வந்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாது.

திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், மதிமுகவும், வரும் நாடாளுமன்றத்  தேர்தலில் தலா இரு தொகுதிகளில் போட்டியிட விரும்புகின்றன. இம்முறை திருமாவளவனும், வைகோவும் கட்டாயம் போட்டியிட்டே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.

இப்படி ஒரு பிரச்சனை ஓடிக் கொண்டிருக்க திருமாவளவன், ஏற்கனவே போட்டியிட்ட சிதம்பரத்திலும், வைகோ, திருச்சி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. இதற்காக, இப்போதே, திருச்சி தொகுதியை தயார் செய்யும் தீவிரத்தில் வைகோ இருக்கிறார். தொடர்ந்து திருச்சியிலேயே நிகழ்ச்சிகளை நடத்தும் வைகோ, அங்கிருக்கும் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மக்களை கவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். தி.மு.க., தொண்டர்களையும் கவரும் தீவிரத்திலும் இருக்கிறார்.

ஆனால் திமுக தரப்போ, இருவரும் கேட்கும் தொகுதிகளை தருவதோடு, இரு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிதான் கொடுக்க முடியும் என்பதை, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் மூலமாக சொல்லி விட்டனர். 

அதோடு, வைகோ மற்றும் திருமாவளவன் இருவரும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் திமுக தரப்பில் கறாராக சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிபந்தனை வைகோ மற்றும் திருமாவை கடும் கோபம் அடையச் செய்துள்ளது. இதையடுத்து அவர்கள் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவார்கள் என கூறப்படுகிறது.

இதனிடையே அடுத்த மூவாக திருமாவளவனை அரவணைத்து கூட்டணியில் சேர்த்துக் கொள்ள தினகரன் தயாராக இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே தேர்தலை சந்திக்க தங்கள் கட்சி தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்  தினகரன். மேலும் தேசிய கட்சிகள் அல்லாது மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இரண்டாம் கட்ட தலைவர்கள் மூலம்  அமமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடையே பேச்சு வார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதே போல் வைகோவையும் கூட்டணிக்குள் இழுத்துப் போட தினகரன் தரப்பு பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!