மோசடி வித்தைக்காரரைப்போல மோடி புது புரூடா... ஒரே சிரிப்பா இருக்கு, ஒருநாள் விட்டு சீண்டும் கி.வீரமணி!!

By sathish kFirst Published Feb 2, 2019, 7:39 PM IST
Highlights

எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை. அதுவும் கடந்த நான்கரை ஆண்டுகளில் உதயமாகாத ஞானோதயம் - புது புரூடா - இப்போதுதான் தோன்ற வேண்டுமா? என கி.வீரமணி பட்ஜெட் பற்றி கலாய்த்துள்ளார்.

மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்;  மோடி தலைமையிலான அரசின் பதவிக் காலம் இன்னும் 60 நாள்கள் கூட இல்லாத நிலையில், அந்த அரசால் நேற்று (1.2.2019) தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட் -2019-2020 (Interim Budget - 2019-2020) என்பது உலகறிந்த உண்மை. தேன் தடவிய வாக்குறுதிகளை அள்ளி வீசியிருப்பது எதைக் காட்டுகின்றது? ஆனால், இந்த வரவு - செலவுத் திட்டத்தினை ஏதோ அடுத்த அய்ந்தாண்டு காலத்திற்கும் இவர்களுக்குப் பட்டா எழுதிக் கொடுத்ததுபோல, பல தேன் தடவிய வாக்குறுதிகளை அள்ளி வீசியிருப்பது எதைக் காட்டுகின்றது? மலையை நகர்த்தி வைக்க 30 நாள் எனக்கு ஊட்டச் சத்துணவு தந்து பராமரியுங்கள் என்று கூறி, அதை நம்பி 30 நாளும் உணவு கொடுத்து ஊக்கமூட்டினால் - கெடு நாள் வந்தவுடன், ‘‘அதைத் தூக்கி என் தோளில் வைத்தால் வேறு இடத்தில் அதை மாற்றி வைத்து விடுகிறேன்’’ என்று கூறிய மோசடி வித்தைக்காரரைப்போல, மோடி அரசின் பட்ஜெட், பல்வேறு ஒப்பனைகளை வைத்து தாக்கலாகியிருக்கிறது.


பட்ஜெட் அல்ல; பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை இதை நிதிநிலை அறிக்கை என்பதைவிட, பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்று கூறுவதே மிகவும் பொருத்தமாகும்! முந்தைய தேர்தல் வாக்குறுதிகளில் 15 லட்ச ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கில் - கறுப்புப் பணத்தை மீட்டு போடுவோம் என்பது நடந்ததா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்பது நிறைவேற்றப்பட்டதா? அதன் ரகசியத்தை நிதின் கட்கரி உடைத்தாரே, நினைவில்லையா? விவசாயிகளின் வேதனைகளும், தற்கொலைகளும் கடந்த நான்கே முக்கால் ஆண்டு மோடி - பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் குறைந்ததா?

தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் குறி வைத்து தாக்கப்படுவதோடு, அவர்களது வாழ்வாதாரத்தைப் பறிக்கும் நிகழ்வுகள் அன்றாட கொடுமைகளாகத் தொடரும் நிலையில், அடுத்து வந்தால், மீனவருக்கென ஒரு தனி அமைச்சகம் அமைப்பார்களாம்; இது மீனவ சமூகத்தை ஏமாற்றுவதல்லாமல், வேறு என்ன? தனி அமைச்சரகம் இல்லாததால்தான் - அவர்களுக்கு எதிராக அன்றாடம் நடைபெறும் அநீதி - அக்கிரமங்களைத் தடுக்க முடியவில்லையா? எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை. அதுவும் கடந்த நான்கரை ஆண்டுகளில் உதயமாகாத ஞானோதயம் - புது புரூடா - இப்போதுதான் தோன்ற வேண்டுமா? இந்த வாக்கு வங்கி வித்தைகளால் எந்த மீனவ சகோதரரும் ஏமாறமாட்டார்கள்.


‘இந்து’ ஏட்டின் தலைப்பு! ‘‘வாக்குகளை இதன்மூலம் வாங்குவதற்கான பேர பட்ஜெட்’’ என்று ‘இந்து’ ஏடு (ஆங்கிலம்) ‘‘Shopping for Votes’’ என்ற தலைப்பிட்டு எழுதியுள்ளது - நன்கு நிலைமையை விளக்கியுள்ளது. மரபுகள் மீறப்பட்டு, தங்களது அதிகார எல்லை தாண்டிய வாக்குறுதிகளைப் போலவே, நிதி ஆதாரங்களைப்பற்றிக் கவலையே இன்றி, ‘மெகா’ ‘மெகா’ திட்டங்களைக் கூறியுள்ளது. இந்த பட்ஜெட் மூலம் புது வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுமா என்ற கேள்வியைவிட, நம் இளைஞர்களுக்குப் பறிபோன வேலை வாய்ப்புகளாவது மீண்டும் கிடைக்க வாய்ப்பு உண்டாகுமா? என்ற கேள்விக்காவது விடை இருக்கிறதா? தேடிப் பாருங்கள், புரியும்! வானவில் போன்றது இது; பார்க்க அழகு - பயன் ஏதும் இருக்காது.!

click me!