சிபிஐயின் புதிய இயக்குராக ரிஷி குமார் சுக்லாவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு முடிவின்படி இந்த உத்தரவி பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறினர். இதையடுத்து இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில், மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, அலோக் வர்மா டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு வந்து மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா மீதான ஊழல் புகாரில் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நியமனக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில், சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டு, தீயணைப்புத்துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார்.
undefined
புதிய பதவியை ஏற்க மறுத்த அலோக் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே, பிரதமர் மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அடங்கிய உயர் மட்டக்குழு ஆலோசனை நடத்தியது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் சிபிஐயின் புதிய இயக்குராக ரிஷி குமார் சுக்லாவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவர் பதவியேற்ற நாளில் இருந்து 2 ஆண்டுகள் பதவியில் இருப்பார். 1983 ஐ.பி.எஸ்., பேட்சை சேர்ந்த ரிஷிகுமார் சுக்லா மத்திய பிரதேச மாநில டிஜிபியாக பணியாற்றியுள்ளார். தற்போது, ம.பி., மாநில போலீஸ் வீட்டு வசதி வாரிய தலைவராக உள்ளார்.