
மலேசிய போலீஸ் தன்னை கைதி போல் நடத்தினார்கள் என்றும், 16 மணி நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்தேன்… 24 மணி நேரமாக உணவு உண்ணவில்லை…. பினாங்கு துணை முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டும், நான் முன்னாள் எம்.பி., என்பதற்கான சான்றினை காட்டிய போதும், மலேசிய போலீசார் என்னை விடுவிக்கவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வராக உள்ள பேராசிரியர் ராமசாமி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மலேசியா சென்றார். நேற்று காலை கோலாலம்பூர் விமான நிலையம் சென்ற வைகோவை தடுத்து நிறுத்திய விமான நிலைய அதிகாரிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை.
ஆபத்தானவர்கள் பட்டியலில் வைகோவின் பெயர் இருப்பதாக கூறி மலேசிய அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதையடுத்து வைகோ இந்தியா திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். நேற்று சென்னை திரும்பிய அவர்,விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய வைகோ,
மலேசியாவில் நடைபெறும் பினாங்கு துணை முதல்வர் இல்ல திருமண விழாவுக்காக சென்றிருந்தேன். மலேசிய விமான நிலையத்தில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மலேசிய போலீஸ் என்னை கைதி போல் நடத்தினர். 16 மணி நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்தேன். 24 மணி நேரமாக உணவு உண்ணவில்லை என தெரிவித்தார்.
பினாங்கு துணை முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டும், நான் முன்னாள் எம்.பி., என்பதற்கான சான்றினை காட்டிய போதும், மலேசிய போலீசார் என்னை விடுவிக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
இலங்கை அரசின் அழுத்தத்தினால் தான் மலேசியாவில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 2009ல் இலங்கை அரசை கடுமையாக விமர்சித்திருந்தேன். புலிகள் ஆதரவு குரல் எங்கும் எழக் கூடாது என இலங்கை அரசு நினைக்கிறது அதனாலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக வைகோ புகார் தெரவித்தார்.
இப்பிரச்சனையில் தமக்கு ஆதரவளித்த ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், வாசன் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் வைகோ கூறினார்.