
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை மலேசிய அரசு, விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி கைது செய்திருப்பதற்கு, திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வராக உள்ள பேராசிரியர் ராமசாமி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று நள்ளிரவு மலேசியா புறப்பட்டுச் சென்றார்.
இன்று காலை கோலாலம்பூர் விமான நிலையம் சென்றடைந்த வைகோவை தடுத்து நிறுத்திய விமான நிலைய அதிகாரிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை.
மலேசியா நாட்டுக்கான ஆபத்தானவர் என்ற பட்டியலில் வைகோவின் பெயரும் இடம்பெற்றிருப்பதாக கூறி தடுத்து வைத்துள்ளனர். சென்னைக்கு திருப்பி அனுப்பவும் ஏற்பாடு செய்துள்ளனர். மலேசிய அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை மலேசிய அரசு, விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி கைது செய்திருப்பதற்கு, தி.மு.கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தானவர் என்றெல்லாம் கூறி முறைப்படி விசா பெற்றுச் சென்றவரை மலேசிய அரசு கைது செய்து, தனி அறையில் வைத்திருப்பது மனித உரிமை மீறல் மட்டுமின்றி, அத்துமீறலும் அராஜக நடவடிக்கையுமாகும் என ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்..
இந்தியப் பாராளுமன்றத்தில் பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்து, ஒரு அரசியல் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் வைகோவின் கைது பற்றி மத்திய அரசும் உடனே தலையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கவலையளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே இந்திய வெளியுறவுத்துறை, மலேசிய தூதரக அதிகாரிகளை அழைத்து வைகோவை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், அவரைக் கௌரவமாக நடத்திட தக்க நடவடிக்கைகளைத் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக மு.க.ஸ்டாலின் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.