
விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தைப் பார்த்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, படத்தைப் பாராட்டியதோடு படத்தில் உள்ள கருத்துகளுடன் உடன்படுவதாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் தடைகள் பலவற்றைக் கடந்து தீபாவளியன்று வெளியாகி பல்வேறு வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது. அனைத்து தரப்பினரிடமிருந்தும் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், படத்தில் ஜிஎஸ்டி , பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். பாஜகவின் கருத்திற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில் உள்ள அபிராமி திரையரங்கில் மெர்சல் திரைப்டத்தை பார்த்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, படம் மிகவும் சிறப்பாக இருந்தது என்றும். விஜய்யின் மூன்று தோற்றங்களிலும் சிறப்பாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அற்புதமாக உள்ளது என தெரிவித்தார்..
மெர்சல் திரைப்படத்தில் மருத்துவமனை தொடர்பாக தெரிவித்தக் கருத்துகள் அனைத்தும் தற்போதைய உண்மைநிலையையே விவரிக்கின்றன என்றும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சரியான மருத்துவம் கிடைப்பதில்லை என்ற உண்மையை படம் சொல்லி இருப்பதாகவும் தெரிவித்தார்.
படத்தில் உள்ள கருத்துகள் அனைத்திற்கும் தனக்கு உடன்பாடு உள்ளது என்றும் இதை எதிர்ப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று கூறினார். இதற்காக பாஜக கோபப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் வைகோ தெரிவித்தார்.