
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்தார். தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலினையும் வைகோ சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
திமுகவில் இருந்து வைகோ வெளியேறிய பின்னர், அக்கட்சியை கடுமையான எதிர்த்து வந்தார். இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவுக்கு வைகோ ஆதரவு அளித்தார். அக்கட்சியின் வேட்பாளர் மருது கணேசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
இதனிடையே அண்மையில் சென்னை எழும்பூர் மதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திராவிட இயக்கத்தையும், தமிழக வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க திமுகவுடன் மதிமுக கூட்டணி தொடரும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திராவிட இயக்கத்தை காக்கவும், மாநில சுயாட்சிக் கொள்கைக்கு வலுவூட்டவும், தமிழக வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக தொடர்ந்து செயல்படும் என்றார்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைகோ சந்தித்தித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தாக கூறினார்.
பின்னர் ஆழ்வார்போட்டை சென்ற வைகோ, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டப் பேரவை நடைபெற்று வரும் நிலையில் கருணாநிதி – வைகோ –ஸ்டாலின் சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.