
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எதை காலி செய்ததோ இல்லையோ, தமிழக பாஜக.,வின் கொஞ்ச நஞ்சம் இருந்த பெயரையும் காலி செய்துவிட்டது. நோட்டாவுடன் போட்டி போடும் அளவுக்கு பாஜக.,வின் ஓட்டுகள் குறைந்து, நோட்டாவை விடக் கீழிறங்கியதில் அக்கட்சித் தொண்டர்கள் ரொம்பவே மனமுடைந்து போனார்கள். அள்ளிவிடப்பட்ட தொகையில் தொலைந்து போனது எங்கள் மானம் என்று பாஜக., தொண்டர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் மற்ற கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் கலாய்த்தது போய், இப்போது அவர்களை மேலும் கலாய்த்து ஒரு விளம்பரம் வந்திருக்கிறது. ஒரு வார இதழில் வெளியான விளம்பரம், இப்போது பாஜக., தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தாமரை போலே... நோட்டாவை விடக் குறைவான... வெளியூர் ... டாக்சி கட்டணங்கள்... என்று தலைப்பிட்டுச் சொல்லும் அந்த விளம்பரத்தைக் கண்டதும் பாஜக., தொண்டர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இப்படியுமா நம்மை கலாய்ப்பார்கள் என்று கொதித்துப் போனார்கள். அந்த விளம்பரத்தில் வந்த கால் செண்டர் எண்ணுக்கு போன் செய்து, தொடர்புடைய உரிமையாளரை ஒரு பிடி பிடித்து விட்டார்கள். அவர்களில் ஒருவர், அந்த உரிமையாளருடன் பேசியதை எல்லாம் வாட்ஸ் அப்பில் உலவ விட்டுள்ளார்.
எப்படி இருந்த கட்சி இப்படி ஆகிவிட்டதே என்று தமிழக பாஜக.,வைப் பற்றி அதன் தொண்டர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள் சமூக வலைத்தளங்களில். காரணம், கூட்டணிக் கட்சிகளின் தயவு இல்லாமல், தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் மட்டும் பெரும் வளர்ச்சி பெற்ற தேசியக் கட்சியாக பாஜக., திகழ்ந்தது, அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன்னர்! பாஜக.,வில் தனித்துப் போட்டியிட்டு வென்றவர் பத்மநாபபுரத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வேலாயுதம். அப்போது, ஜெயலலிதா என்ற பெரும் ஆலமரம் ஒரு தொகுதி கூடப் பெறாமல் தனித்து வீழ்ந்திருந்தது. 96ஆம் ஆண்டு தேர்தல் அதை சிறப்பாகச் சொல்லும். பின்னரும்கூட கோயமுத்தூர், திருச்சி உள்ளிட்ட சில இடங்களில் பாஜக., கணிசமான ஓட்டு வங்கியை வளர்த்துக் கொண்டிருந்தது.
கூட்டணி வைத்துப் போட்டியிட்ட தேர்தல்களில் பெற்றதைவிட, கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் கூட்டணி இல்லாமல் அது உறுப்பினர்களைப் பெற்றது. ஆனால்,பின்னாளில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து 98, 99ல் மூன்ற், நான்கு எம்பிக்களைப் பெற்று தில்லிக்குச் சென்றது. தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சர் இருந்தும், அக்கட்சியால் தமிழகத்தில் பெரும் செல்வாக்கை பெற இயலவில்லை.
இப்போதும், சமூக வலைத்தளங்களில் மட்டும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அல்லது வீராவேசமாகப் பொங்கிஎழும் அளவுக்கு கட்சி கரைந்து போய்க் கொண்டிருக்கிறது. தேசியக் கட்சிக்கு ஆர்.கே.நகரால் நேர்ந்த பரிதாபத்தை இந்த விளம்பரமே மேலும் விளம்பிக் கொண்டிருக்கிறது.