
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்ட தீபாவின் கார் டிரைவர் ராஜாவுக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தானே அந்த பொறுப்பை வகிக்கப்போவதாக இன்று காலை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஜெ. தீபா தெரிவித்தார்.
கடந்த 24ஆம் தேதி ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பைத் தொடங்கிய ஜெ.தீபா தன்னை பொருளாளர் என்று அறிவித்து, தொடர்ந்து சில நிர்வாகிகள் பெயர்களையும் அறிவித்தார்.
இதனை அடுத்து, இந்த பேரவையில் செயலாளராக அறிவிக்கப்பட்ட தீபாவின் கார் டிரைவர் ராஜா, பலருக்கு பதவி வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக புகார் குவிந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சென்னை தியாகராய நகரில் உள்ள தீபா வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராஜாவுக்கு எதிராக முழக்கமிட்ட தொண்டர்கள், “ராஜாவை பேரவை செயலாளராக ஏற்க முடியாது; அவர் யோக்கியமானவர் இல்லை” என்று கூறினர்.
காலை 11 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியமும் தொடர்ந்ததை அடுத்து தீபா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். ராஜாவை செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாகவும், தானே பேரவையின் செயலாளராகவும் செயல்படுவேன் என்றும் கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அனைத்திந்திய அன்ன திராவிட முன்னேற்ற கழக (ஜெ.தீபா) அணி மற்றும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை கொள்கைக்கும் கோட்பாடுகளுக்கும், விதிகளுக்கும் மாறாக தொடர்ந்து கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இன்று முதல் கழகத்திலிருந்தும் பேரவை அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் A.V..ராஜா அவர்கள் விடுவிக்கப்படுகிறார். எனவே அவருடன் கழக உறுப்பினர்கள் யாரும் கட்டுப்பாட்டை மீறி எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பின் போதே பலர், தீபா வீட்டின் உள்ளே புகுந்து கோஷமிட்டனர். ராஜா பணம் வாங்கிக்கொண்டு பலரை ஏமாற்றியதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். இந்நிலையில், செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ராஜா, தனது ஆதரவாளர்கள் 100 பேருடன் வந்து, தீபா வீட்டின் முன்பு ரகளையில் ஈடுபட்டார். மேலும், அங்கிருந்த பத்திரிகையாளர்களுக்கும் மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் முழுவதும் பதட்டமான சூழல் நிலவியுள்ளது.